தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். ரோஹித் ஆடியது அவருக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் இது மிக முக்கியமான இன்னிங்ஸ்.

முதல் 3 விக்கெட்டுகளை இந்திய அணி 39 ரன்களுக்கே இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ரஹானேவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார் ரோஹித் சர்மா. ராஞ்சியில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி மயன்க் அகர்வால், புஜாரா, கோலி ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை 39 ரன்களுக்கே இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ரஹானேவும் ரோஹித்தும் இணைந்து நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டு அதன்பின்னர் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். முதல் நாளான நேற்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை நிதானமாக ஆடிவிட்டு, அதன்பின்னர் இரண்டாவது செசனில் அதிரடியாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மூன்றாவது செசன் முழுவதுமே மழையால் தடைபட்ட நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் அடித்திருந்தது. 

நேற்றே ரோஹித் சர்மா சதமடித்துவிட்டார். ரோஹித் 117 ரன்கள், ரஹானே 83 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். சதமடித்த ரஹானே 115 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித்துடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா இரட்டை சதமடிக்க ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் அடித்திருந்தது.

199 ரன்களுடன் உணவு இடைவேளைக்கு சென்ற ரோஹித் சர்மா, திரும்பி வந்ததுமே ஒரு ரன் அடித்து இரட்டை சதத்தை பூர்த்தி செய்துவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் முதல் இரட்டை சதம் இது. ரோஹித் சர்மா இரட்டை சதமடித்துவிட்டதால் இனிமேல் அதிரடியாக ஆடி மளமளவென ஸ்கோரை உயர்த்திவிடுவார். இந்திய அணி இன்றைய ஆட்டம் முடிவதற்குள் தென்னாப்பிரிக்காவை பேட்டிங் ஆட விட வேண்டும் என நினைக்கும். எனவே முடிந்தவரை விரைவில் ஸ்கோர் செய்ய வேண்டும் என்பதால் இரண்டாவது செசன் செமயா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.