இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடருக்கான அணியில் ஷிவம் துபே எடுக்கப்பட்டார். ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் பேட்டிங் ஆட துபேவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது போட்டியில், தொடக்க வீரர் ராகுல் அவுட்டானதும், மூன்றாம் வரிசையில் இறக்கப்பட்டார் ஷிவம் துபே. கேப்டன் கோலியும் அணி நிர்வாகமும் தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அசத்தினார் ஷிவம் துபே.

களத்திற்கு வந்த ஆரம்பத்தில் ஷாட்டுகள் சரியாக கனெக்ட் ஆகாமலும் டைமிங் இல்லாமலும் திணறினார். அதன்பின்னர் களத்தில் நிலைத்த பிறகு, அபாரமான ஷாட்டுகளை அசால்ட்டாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்தார். முதல் 15 பந்தில் தடுமாறிய ஷிவம் துபே, அடுத்த 15 பந்தில் வேற லெவலில் ஆடினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை வெளுத்து வாங்கிய ஷிவம் துபே, 30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரில் இறங்கி, சிறப்பாக ஆடிய ஷிவம் துபே, தன்னை அந்த வரிசையில் இறக்கிய முடிவு சரியானதுதான் என்று நிரூபித்தார். ஷிவம் துபேவின் அதிரடியான பேட்டிங்கால்தான் இந்திய அணி 170 ரன்களையே எட்டியது. இல்லையெனில் இந்த ஸ்கோரைக்கூட எட்டியிருக்க முடியாது. அறிமுக இன்னிங்ஸிலேயே, அதுவும் விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரில் இறங்கி அரைசதம் அடித்து அசத்தினார் ஷிவம் துபே. இதன்மூலம் அறிமுக டி20 இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 

ஆனால் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவியது. போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷிவம் துபே, களத்திற்கு வந்ததும் நான் திணறிக்கொண்டிருந்தபோது, ரோஹித் சர்மா தான் எனக்கு ஆதரவாக இருந்தார். அமைதியாக நிதானமாக இரு.. உனது பலம் எதுவோ அதன்படி ஆடு என்று அறிவுறுத்தினார். உண்மையிலேயே அந்த நேரத்தில் சீனியர் வீரரிடமிருந்து அப்படியான உத்வேகம் தான் எனக்கு தேவைப்பட்டது. அதை ரோஹித் செய்தார் என்று ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.