இந்திய அணியின் டி20 கேப்டனாக இருந்த ரோகித் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் சுயவிவர காட்சிப் படத்தை மாற்றிய நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பார்படாஸில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 2ஆவது முறையாக இந்திய அணியானது டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. மேலும், இதில் இந்திய அணி சாம்பியனான நிலையில் கேப்டன் ரோகித் சர்மா எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார்.
மேலும், இறுதிப் போட்டி நடைபெற்ற கென்சிங்டன் ஓவல் மைதானத்தின் புல் மற்றும் மண்ணை எடுத்து சாப்பிட்டார். அதுமட்டுமின்றி மைதானத்தில் இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை ஊன்றினார். இதைத் தொடர்ந்து டெல்லி வந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு மும்பை சென்ற இந்திய அணியினர் வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் சென்றனர். கடைசியாக வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் டிராபி வென்று அனைத்து கொண்டாட்டங்களும், பாராட்டுக்களும் ஓய்ந்த நிலையில் ரோகித் சர்மா சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். நேற்று மாலை தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் சுயவிவரப் படத்தை மாற்றிய போது ரசிகர்களின் கோவத்திற்கு உள்ளானார். மேலும், அவர் இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை அவமரியாதை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டினர்.
டி20 உலகக் கோப்பை வெற்றியில் பல மறக்க முடியாத சின்ன சின்ன தருணங்கள் இருந்தன. கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியக் கொடியை நடும் புகைப்படத்தை ரோகித் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் புதிய காட்சிப் படமாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ரசிகர்கள் வெளிநாட்டு களத்தில் அதனை பொருத்தமற்றதாக உணர்ந்தனர். இந்த செயலானது, அந்த பிரதேசத்தின் உரிமையை குறிக்கிறது.
எனினும், ரோகித் சர்மாவின் புதிய காட்சி புகைப்படத்தில் இந்திய கொடியின் நிலை முக்கிய பிரச்சனையாக அமைந்துவிட்டது. ரோகித் சர்மாவின் புகைப்படத்தில் மூவர்ணக் கொடியானது தரையில் தொட்டது. 1971 ஆம் ஆண்டு தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவை ரசிகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். "கொடி வேண்டுமென்றே தரையையோ அல்லது தண்ணீரிலோ பட அனுமதிக்க கூடாது.
ஆனால், ரோகித் சர்மா வைத்திருந்த புகைப்படம் தரையில் பட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் ரோகித் சர்மாவிற்கு எதிராக தற்போது குரல் எழுப்பியுள்ளனர். இது தவறான காட்சியின் கீழ் வருகிறது. ஆதலால், இனிமேல் இந்திய தேசியக் கொடியை அவமதிக்காதீர்கள் என்று பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2ன் படி தேசிய கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். பொது இடங்களில் தேசிய கொடியை எரிப்பது, இழிவுபடுத்துவது, சேதம் விளைவிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை, அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
