அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருவரும் புறக்கணிக்கப்பட்டனர். க்ருணல் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்கள் பவுலிங் போடுவதுடன் பேட்டிங்கும் நன்றாக ஆடுவதால் அவர்களுக்கு அணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. 

அதனால் சாஹல் - குல்தீப்பிற்கு இனிமேல் அணியில் இடமளிக்கப்படாது என்றும் டி20 உலக கோப்பைக்கான அணியில் அவர்களுக்கான வாய்ப்பு கேள்விக்குறிதான் என கருதப்பட்ட நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஆட வாய்ப்பு பெற்ற சாஹல், முதல் இரண்டு போட்டிகளிலும் அபாரமாக வீசினார். வங்கதேச வீரர்களுக்கு சாஹல் தான் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் இரண்டாவது போட்டியில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் சாஹல். இரண்டு போட்டிகளிலும் டெத் ஓவர்களை கூட அருமையாக வீசினார். 

இந்நிலையில், சாஹல் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, சாஹல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக வீசி அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார். ஐபிஎல்லில் நன்றாக வீசியதன் விளைவாக அங்கீகாரத்தை பெற்ற சாஹல், ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியில் சாஹல் மிக முக்கியமான வீரர் என்பதை இந்த தொடரில் நிரூபித்திருக்கிறார். 

அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். பேட்ஸ்மேன் அடுத்ததாக என்ன செய்ய முயற்சிப்பார் என்பதும் அவருக்கு தெரியும். அவ்வாறு சரியாக கணித்து பந்துவீசுவதால்தான், அவரது பவுலிங் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்கிறது. சாஹலின் பவுலிங் நல்ல வேரியேஷன் இருக்கும். அவர் திறமையான பவுலர். மிடில் ஓவர்களில் மட்டுமல்லாது பவர்ப்ளேயிலும் நன்றாக வீசக்கூடியவர் சாஹல். டெத் ஓவர்களில் கூட அபாரமாக வீசுவார். நான் கூட அவரை 18வது ஓவரை வீசவைத்தேன். நன்றாகத்தான் வீசினார். எனவே பவர்ப்ளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என எந்த சூழலிலும் சிறப்பாக வீசக்கூடியவர் சாஹல் என்று ரோஹித் புகழ்ந்தார்.