வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது போட்டியில் ஆடிவருகிறது இந்திய அணி. 

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, இந்த முறையும் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர்.

தொடக்க வீரர்கள் இருவரும் அவசரப்படாமல் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினர். அவசரப்பட்டு தவறான ஷாட்டுகளை ஆடாமல், ஷாட் செலக்‌ஷனில் மிகவும் கவனமாக இருந்தனர். ரோஹித் சர்மா வழக்கம்போல சற்று நிதானமாக ஆட, ராகுல் தனது இயல்பான ஷாட்டுகளை அசால்ட்டாக அடித்து விரைவாக ஸ்கோர் செய்தார். 

மிகச்சிறப்பாக, ஷாட்டுகளை எல்லாம் நேர்த்தியாக ஆடிய ராகுல், 46 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். அவரை தொடர்ந்து ரோஹித்தும் அரைசதம் அடித்தார். இருவருமே சிறப்பாக ஆடினர். அரைசதத்திற்கு பிறகு வழக்கம்போல தனது வேலையை காட்ட தொடங்கிய ரோஹித், அதிரடியாக ஆடி, ராகுலை ஓவர்டேக் செய்தார். 

அரைசதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித்தை தொடர்ந்து ராகுலும் சதமடித்து அசத்தினார். ரோஹித் சதத்திற்கு பின்னரும் கவனமாக ஆடி ஸ்கோர் செய்துவரும் நிலையில், சதமடித்த மாத்திரத்தில் ராகுல் 102 ரன்களில் அல்ஸாரி ஜோசப்பின் பந்தில் ஆட்டமிழந்தார். 

முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து 227 ரன்களை குவித்தனர். 37வது ஓவரின் கடைசி பந்தில் ராகுல் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 

ரோஹித் சர்மா 130 ரன்களை கடந்து, அடுத்த இரட்டை சதத்தை நோக்கி ஆடிவருகிறார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, நான்காவது இரட்டை சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.