3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. இந்திய வீரர்கள் சிட்னியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ஐபிஎல்லின் போது தொடைப்பகுதியில் காயமடைந்த ரோஹித் சர்மா, முதலில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் எடுக்கப்படாத ரோஹித் சர்மா பின்னர் டெஸ்ட் அணியில் மட்டும் எடுக்கப்பட்டார்.

விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். எனவே டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ஆடுவது இந்திய அணிக்கு அனுகூலமான விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனாலும் காயத்திலிருந்து முழுமையாக மீளாத ரோஹித் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

ரோஹித் சர்மாவை போலவே சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவும் ஐபிஎல்லில் காயமடைந்ததால் அவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் உள்ளார். ஆனால் அவர்கள் இருவருமே முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் முழு ஃபிட்னெஸை பெற வாய்ப்பில்லை. அவர்கள் காயத்திலிருந்து மீண்டும் முழு உடற்தகுதியை பெற இன்னும் கால அவகாசம் ஆகும் என்பதால், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் ஆடமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது குறித்த அறிவிப்பு பின்னர் வரும். ரோஹித் சர்மாவும், ஆஸ்திரேலியாவில் நல்ல அனுபவம் கொண்ட  சீனியர் ஃபாஸ்ட் பவுலரா இஷாந்த் சர்மாவும் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.