ஒருநாள் கிரிக்கெட்டின் டாப் 2 வீரர்களாக திகழும் கோலியும் ரோஹித்தும் தனித்தனியாக மட்டுமல்லாமல் இருவரும் இணைந்தும் பல மைல்கற்களை எட்டிவருகின்றனர். 

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளையும் சதங்களையும் குவித்துவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது 42வது சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் கோலி 120 ரன்களை குவித்தார். ஆனால் ரோஹித் சரியாக ஆடவில்லை. வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 74 ரன்களை சேர்த்தனர். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை அதிகமாக அடித்த இந்திய ஜோடி பட்டியலில் சச்சின் - சேவாக் ஜோடியை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ரோஹித் - கோலி ஜோடி. 

ரோஹித் - கோலி ஜோடி நேற்று 32வது முறையாக 50 ரன்களுக்கு மேல் அடித்தது. சச்சின் - சேவாக் ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் 31 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இந்த பட்டியலில், 55 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த சச்சின் - கங்குலி இணை தான் முதலிடத்தில் உள்ளது.