உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

இந்திய அணி தோல்வியின் எதிரொலியாக, அணி தேர்வு, அரையிறுதியில் பேட்டிங் ஆர்டரை மாற்றியது ஆகியவை கடும் விமர்சனத்துக்குள்ளானது. இரண்டு ஆண்டுகளாக நான்காம் வரிசை பேட்ஸ்மேனை தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. உலக கோப்பையில் தோற்று வெளியேற, மிடில் ஆர்டர் சொதப்பலும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ராபின் சிங், அரையிறுதியில் தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியது குறித்து விமர்சித்ததோடு ரவி சாஸ்திரியையும் கடுமையாக சாடியிருந்தார். இப்போது இருக்கும் பயிற்சியாளரின் கீழ் இரண்டு அடுத்தடுத்த உலக கோப்பைகளில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியுள்ளது. டி20 உலக கோப்பையிலும் சரியாக ஆடவில்லை. எனவே 2023 உலக கோப்பையை மனதில்வைத்து அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டிய தருணம் இது என்று ஏற்கனவே ராபின் சிங் சாடியிருந்தார். 

இந்நிலையில், தற்போது அணி தேர்வையும் விமர்சித்துள்ளார். ரஹானே மற்றும் ராயுடு ஆகிய இருவருமே உலக கோப்பை அணியில் இடம்பெற தகுதியானவர்கள். ஆனால் அவர்கள் இருவருமே எடுக்கப்படவில்லை. அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆடும் லெவனில் ஷமியை எடுத்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்று ராபின் சிங் தெரிவித்துள்ளார்.