உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பை அணிக்கான 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். ஒன்றிரண்டு இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது. 

உலக கோப்பைக்கான அணிக்கு தேவைப்படும் வீரர்களில் ஒருவர் ரிசர்வ் விக்கெட் கீப்பர். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் தேவை. அந்த இடத்திற்கு அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டிற்கே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. 

தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ஆடியபோதும், அவர் சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் நிலையிலும், அவரைவிட ரிஷப் பண்ட்டுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அதை கெடுத்துக்கொண்டார் ரிஷப் பண்ட். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டு ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். முதல் மூன்று போட்டிகளில் தோனி ஆடியதால் ரிஷப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி 2 போட்டிகளில் ரிஷப் பண்ட்டை பரிசோதிக்கும் விதமாக தோனிக்கு ஓய்வளித்துவிட்டு ரிஷப்பிற்கு நான்காவது போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. 

ஆனால் அணி நிர்வாகத்தினர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் தனக்கு அளிக்கும் முக்கியத்துவத்திற்கும் பாத்திரமாக ரிஷப் பண்ட் நடந்துகொள்ளவில்லை. விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக செயல்பட்டார். பேட்டிங் ஓரளவிற்கு ஆடினாலும் விக்கெட் கீப்பிங்கில் படுமோசம். 

பேட்ஸ்மேன் அடிக்கத் தவறும் பந்துகளை பிடிக்காமல் பவுண்டரிக்கு விட்டார். 39வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்பிற்கு ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்டார். 44வது ஓவரில் சாஹல் வீசிய முதல் பந்தில் டர்னரை ஸ்டம்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். எளிமையான அந்த ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷப் தவறவிட்டதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

இவ்வாறு விக்கெட் கீப்பிங்கில் பயங்கரமாக சொதப்பினார். இந்த விக்கெட் கீப்பிங்கை வைத்துக்கொண்டு இவரை உலக கோப்பை அணியில் எடுத்தால், தோனி ஆடாத போட்டிகளில் அணியை தோல்விப்பாதைக்கு இவரே அழைத்து செல்லக்கூடிய அபாயம் உள்ளது. ரிஷப் பண்ட் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் ஆடவைக்கலாம் அல்லது தோனி ஓய்வுபெற்ற பிறகு வேறு வழியே இல்லாமல் இவரை ஆடவைத்து தேற்றலாம். 

நேற்றைய போட்டியில் இவர் சொதப்பியதுமே, இவரை உலக கோப்பைக்கு அழைத்து செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்திருப்பர் அணி நிர்வாகத்தினர். எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ரிஷப் பண்ட் மீது அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் வைத்திருந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை.