பிளாட்பாரத்தில் தூங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் உதைத்து எழுப்பிய ரயில்வே போலீஸ்!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் தூங்கிய சிறுவனை பூட்ஸ் காலால் உதைத்து எழுப்பிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், ரயில் நிலைய நடைமேடையில் படுத்திருந்த சிறுவனை உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோ உத்தர பிரதேசத்தின் பல்லியாவில் பதிவுசெய்யப்பட்டது எனத் தெரிகிறது.
பெல்தரா சாலை ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு ரயில் நிலைய பிளாட்பாரத்திங் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை போலீஸ் அதிகாரி இரக்கமின்றி உதைத்து எழுப்பியுள்ளார். பூட்ஸ் காலால் மிதி வாங்கிய அந்தச் சிறுவன் வலி தாங்க முடியாமல் எழுந்து செல்வதை வீடியோவில் காணமுடிகிறது.
தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது ரயில்வே போலீஸ் அதிகாரி தன் காலை வைத்து நிற்பதையும், சிறுவனை தனது கால்களால் தள்ளி, உதைப்பதையும் வைரல் வீடியோவில் காணலாம். அப்போது அந்தப் பகுதியில் நின்றிருந்த ஒருசிலர் சுற்றி நின்றி செய்வதறியாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் யாரும் சிறுவனை மிதிக்கும் அதிகாரியைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ளனர். ரயில்வே போலீசாரின் செயலைப் பார்த்து ஆத்திரமடைந்த பலர் வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது. "சம்பவத்தை அறிந்ததும் உடனடியாக, சம்பந்தப்பட்ட ரயில்வே கான்ஸ்டபிள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று வடகிழக்கு ரயில்வே கூறுகிறது.
அண்மையில், புனே ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் பாட்டில் தண்ணீரை ஊற்றி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது நினைவூட்டத்தக்கது.
சந்திரயான்-3 விண்கலத்தை 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு