தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், மோசமான விக்கெட் கீப்பிங்கின் காரணமாக டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பிவந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த காயத்தை காரணமாக வைத்து அவரை அப்படியே ஓரங்கட்டிவிட்டு கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக்கியது இந்திய அணி நிர்வாகம். 

அதனால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரிஷப் பண்ட் ஆடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான 3 நாட்கள் பயிற்சி போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் வெறும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து லெவன் அணி வெறும் 235 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வாலும் பிரித்வி ஷாவும் அதிரடியாக தொடங்கினர். ஆனால் பிரித்வி ஷா 39 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கில் இந்த முறையும் ஏமாற்றமளித்தார். வெறும் 8 ரன்களில் கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மயன்க் அகர்வால் 81 ரன்கள் அடித்தார். 

நான்காம் வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார். 65 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 70 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட்.

 

சஹா 38 பந்தில் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்திருந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததால், பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது. 

ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடியிருந்தாலும், டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில் டெஸ்ட் போட்டியில் சஹா இருக்கும் வரை அவர் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என்பது உறுதியாகிவிட்டது.