இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை எட்டியுள்ளார். SENA நாடுகளில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், ரிஷப் பந்த் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) நாடுகளில் மிகவும் வெற்றிகரமான ஆசிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
26 வயதான ரிஷப் பந்த், எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள்!
இந்த இன்னிங்ஸின் போது ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம், தோனிக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையை எட்டிய இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். தோனி 144 இன்னிங்ஸ்களில் 3000 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிஷப் பந்த் 76 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டுக்கு (63 இன்னிங்ஸ்) அடுத்தபடியாக அதிவேகமாக இந்த சாதனையை படைத்துள்ளார்.
SENA நாடுகளில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர்!
ரிஷப் பந்த் இப்போது SENA நாடுகளில் 27 போட்டிகளில் 38.80 சராசரியுடன் 1,746 ரன்கள் குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும். இதிலும் தோனியின் சாதனை முறியடித்துள்ளார். தோனி 32 போட்டிகளில் 1,731 ரன்கள் எடுத்திருக்கிறார். இதன் மூலம் SENA நாடுகளில் அதிக ரன்கள் குவித்த ஆசிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் ஆதிக்கம்:
தனது அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற பந்த், லீட்ஸ் டெஸ் போட்டியில் நிதானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் விளையாடினார். 102 பந்துகளில் அவர் அடித்த 65 ரன்களில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஷுப்மன் கில்லுடன் சேர்ந்து ஆட்டமிழக்காமல் 138 ரன்கள் சேர்த்திருக்கிறார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்தியது. இது இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.
முன்னதாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 159 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 101 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளத்தை அமைத்தார். கேப்டனாக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஷுப்மன் கில், நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்திருக்கிறார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இந்தியாவின் சிறப்பான பேட்டிங்குடன் ஒரு பரபரப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவது நாளான இன்று இந்தியா தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
