இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்தது. 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி கட்டாக்கில் நடந்துவருகிறது. மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகிய இருவரும் நிதானமாக தொடங்கினர். லூயிஸ் சீராக ரன்களை சேர்க்க, லூயிஸ் மந்தமாக பேட்டிங் ஆடினார். ஆனால் இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். 

முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களை சேர்த்தனர். 50 பந்தில் 21 ரன்கள் மட்டுமே அடித்திருந்த லூயிஸை ஜடேஜா தனது சுழலில் வீழ்த்தினார். அதற்கு முன் அவரது கேட்ச்சை தவறவிட்ட நவ்தீப் சைனி, அடுத்த முறை அந்த தவறை செய்யாமல் சரியாக கேட்ச்சை பிடிக்க, லூயிஸ் நடையை கட்டினார். 

இதையடுத்து களத்திற்கு வந்த ரோஸ்டான் சேஸ், களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே குல்தீப் யாதவின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் ரிஷப் பண்ட் அந்த கேட்ச்சை தவறவிட்டார். விக்கெட் கீப்பிங்கிலும் பேட்டிங்கிலும் படுமோசமாக சொதப்பி, கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான ரிஷப் பண்ட், கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி ஓரளவிற்கு நம்பிக்கையை பெற்றார். ஆனால் மீண்டும் இந்த போட்டியில் எளிதான ஒரு கேட்ச்சை கோட்டைவிட்டார். 

ஹோப்பும் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஹெட்மயருடன் இணைந்து தட்டுத்தடுமாறி சேஸ் ஓரளவிற்கு ஆடினார். சேஸ் நிதானமாக ஆட, ஹெட்மயர் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர், 33 பந்தில் 37 ரன்கள் அடித்து நவ்தீப் சைனியின் பந்தில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த சைனியின் ஓவரில் சேஸும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் விட்ட கேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி சேஸ் பெரியளவில் ஆடாததால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ரிஷப் பண்ட்டின் மோசமான விக்கெட் கீப்பிங் வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் அடித்துள்ளது. பூரானும் பொல்லார்டும் இணைந்து ஆடிவருகின்றனர். டெத் ஓவர்களில் அடித்து ஆடும் வல்லமை பெற்ற இருவரும் களத்தில் உள்ளனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்தினால்தான் வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோரை குறைக்க முடியும். இல்லையெனில் ஓரளவிற்கு டீசண்ட்டான ஸ்கோரை அடித்துவிடுவார்கள்.