Rishabh Pant: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயத்துடன் விளையாடி அரை சதம் அடித்த ரிஷப் பண்ட், தோனியின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். இது தொடர்பான செய்தியை விரிவாக பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சரித்திரத்தை ரிஷப் பண்ட் எழுதியுள்ளார். அதுவும் 'தல' தோனி சாதனையை முறியடித்து வெளிநாடுகளில் அல்லது பொதுவான மைதானங்களில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில், இந்திய விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார். இந்த சாதனையை கொழும்புவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது, ரிஷப் பண்ட் நிகழ்த்தினார்.

தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

இந்த போட்டிக்கு முன்பு வரை, தோனி 2,496 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். இப்போது பண்ட் 41.68 என்ற சிறப்பான சராசரியுடன் 2,501 ரன்களைக் குவித்து தோனியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் ஃபரோக் இன்ஜினியர் (1,209), சையத் கிர்மானி (1,109), கிரண் மோர் (901) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதையும் படிங்க:Jaiswal vs Fernando: இலங்கை வீரருடன் மோதல்! ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் விளையாட தடையா? ஐசிசி ரூல்ஸ் என்ன?

முதல் நாள் ஆட்டத்தில் பண்ட்டுக்கு காயம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தின்போது, இடது கையில் பந்து தாக்கியதால் ரிஷப் பண்ட் 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார். போட்டியின் மூன்றாவது செஷனில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா வீசிய ஒரு ஷார்ட் பந்தை பந்த் 'புல் ஷாட்' அடிக்க முயன்றார்.

ஆனால் பந்து பேட்டில் படாமல், நேராக அவரது இடது கையில் பலமாகத் தாக்கியது. வலியால் துடித்த பண்ட்டுக்கு இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் உடனடியாக சிகிச்சை அளித்தார். முதலில் ஐஸ் பேக் வைக்கப்பட்டு, பின்னர் கட்டு போடப்பட்டது. ஆனாலும், பந்த்துக்கு வலி குறையாததால், கட்டு அகற்றப்பட்டது.

காயத்துடன் போராடி அசத்தல் அரை சதம்

15 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டியின் 58வது ஓவரில் பண்ட் பிசியோதெரபிஸ்ட்டுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். போட்டியின் இரண்டாம் நாளான இன்று சரண்ஷ் ஜெயின் 6 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். துருவ் ஜுரலுடன் ஜோடி சேர்ந்த பண்ட், அணியின் ஸ்கோரை உயர்த்தப் போராடினார். இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். சில பந்துகள் அவரது தோள்பட்டையிலும் பட்டது. ஆனாலும் ரிஷப் பண்ட் காயத்துடன் தீரத்துடன் போராடி அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க:AUS vs BAN 2nd Test: ஸ்டார்க் வேகத்தில் சிதறிய வங்கதேசம்.. ஆஸ்திரேலியா பதிலடி.. இரண்டே நாளில் முடிந்த போட்டி!

வலுவான நிலையில் இந்தியா

அதிரடியாக விளையாடிய பண்ட் 89 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் அடித்த துருவ் ஜூரல் 59 ரன்களுடன் களத்தில் உள்ளார். இப்போது வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 419 ரன்கள் எடுத்துள்ளது.

ரிஷப் பண்ட்டும், துருவ் ஜுரலும் 7வது விக்கெட்டுக்கு ஜோடியாக 112 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. காயத்தையும் பொருட்படுத்தாமல் அதிரடியாக விளையாடி இந்திய அணியை நல்ல நிலைமைக்கு கொண்டு சென்ற ரிஷப் பண்டுக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.