ரோகித் சர்மா பற்றி ஹர்திக் பாண்டியா இப்படி பேசியிருக்க கூடாது – டிரெண்டாகும் RIP HARDIK PANDYA ஹேஷ்டேக்!
மும்பை இந்தியன்ஸ் சார்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரோகித் சர்மா பற்றி ஹர்திக் பாண்டியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள் RIP HARDIK PANDYA ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் தொடங்குவற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேட் முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பினார். மேலும், ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடி 5 முறை டிராபியை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா மற்றும் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஹர்திக், தனக்கும், ரோகித் சர்மாவுக்கும் இடையில் மோசமாக எதையும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் வருவது ஒரு அதிசயமான உணர்வு தான். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நான் கற்றுக் கொண்ட அனைத்தும் மும்பை அணியிலிருந்து வந்தது தான். நான் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. வான்கடே மைதானத்தில் விளையாடுவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
கேப்டன்ஸி மாற்றம் குறித்து எழுப்பப்படட் கேள்விக்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா, ரசிகர்களின் எமோஷன்ஸ் நன்றாக புரிகிறது. மும்பை அணியின் கேப்டனாக நான் சிறப்பாக விளையாடி எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணியை ரோகித் சர்மா திறம்பட வழிநடத்தி வருகிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த பிறகு அவருடன் பேசுவேன். ரோகித் சர்மாவின் கேப்டன்ஸியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது.
நான் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியின் கீழ் விளையாடி இருக்கிறேன். எனது கேப்டன்ஷியில் ரோகித் சர்மா விளையாடுவது ஒரு போதும் வித்தியாசமாக இருக்காது. எனது தோள்களில் எப்போதும் ரோகித் சர்மாவின் கை இருக்கும். ஒரு கேப்டனாக அணியை வழிநடத்துவது தடுமாறும் போது அவர் எனக்கு உதவியாக இருப்பார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், ரோகித் சர்மா குறித்து ஹர்திக் பாண்டியா தவறாக பேசாத போதிலும், எனது கேப்டன்ஷியில் ரோகித் சர்மா விளையாடுவது வித்தியாசமாக இருக்காது என்று ஹர்திக் பாண்டியா பேசியது, ரோகித் சர்மா ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், கோபமடைந்த ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக RIP HARDIK PANDYA ஹேஷ்டேக் மூலமாக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.