சமீப காலமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரது ஃபார்ம் சிறப்பாக இல்லை என்பது எனக்குத் தெரியும். நான் கடைசியாக அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்த்தேன், அதில் அவர் நான் பார்த்ததிலேயே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது பெரும் விவாதப் பொருளாக மாறியது. மோசமான ஃபார்ம் காரணமாக சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 15 இன்னிங்ஸ்களில் 291 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 47 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். ஏற்கெனவே தொடக்க வீரர் இடத்திற்கு கடும் போட்டி நிலவுவதாலும், பல வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதாலும், தேர்வாளர்களுக்கு சுப்மன் கில்லை நீக்குவதை தவிர வேறு வழியில்லாமல் போனது.
சுப்மன் கில் நீக்கப்பட்டதை நம்ப முடியவில்லை
இந்த நிலையில், டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டதை நம்ப முடியவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். "ஆம், என்னால் அதை நம்ப முடியவில்லை," என்று ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டு, 'தி ஐசிசி ரிவியூ'வில் பாண்டிங் கூறினார்.
ரிக்கி பாண்டிங் ஆச்சரியம்
"சமீப காலமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரது ஃபார்ம் சிறப்பாக இல்லை என்பது எனக்குத் தெரியும். நான் கடைசியாக அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்த்தேன், அதில் அவர் நான் பார்த்ததிலேயே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்" என்று ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டார்.
"ஒன்று, நான் ஆச்சரியப்படுகிறேன், ஆனால் இரண்டு, இது இந்திய கிரிக்கெட்டின் ஆழத்தைக் காட்டுகிறது. சுப்மன் கில் போன்ற ஒரு நல்ல வீரர் உலகக் கோப்பை அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அவர்களிடம் எவ்வளவு நல்ல வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது" என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
அக்சர் படேல் துணை கேப்டன்
டி20 உலகக்கோப்பையில் சுப்மன் கில் நீக்கப்பட்ட பிறகு, அக்சர் படேலை புதிய துணை கேப்டனாக இந்தியா நியமித்துள்ளது. இதற்கு முன்பு, சூர்யகுமார் யாதவின் துணை கேப்டனாக கில் இருந்தார்.
தொடர்ந்து இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வெல்லும் அரிய சாதனையை இந்தியா எதிர்நோக்கியுள்ள நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அக்சரின் நிலை அவரை அணியின் முக்கிய அங்கமாக மாற்றுகிறது என்று பாண்டிங் கருதுகிறார்.
அக்சருக்கு பாண்டிங் புகழாரம்
"உண்மையில் அக்சர் படேல் தான் அவர்களின் முக்கிய வீரராக இருந்து வருகிறார், இல்லையா?" என்று ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டு, பாண்டிங் கூறினார்.
"கடந்த சில தொடர்களில், அவர் வெவ்வேறு நேரங்களில் அவர்களின் பிஞ்ச் ஹிட்டராக இருந்துள்ளார். அவர்கள் அவரை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்துள்ளனர். இடது-வலது கை காம்பினேஷன் தேவைப்படும்போது, அவர் தான் களமிறங்கி அதைச் செய்ய முயன்றார். மேலும், அவர் தனது இடது கை ஆஃப் ஸ்பின்னிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார்" என்று பாண்டிங் குறிப்பிட்டார்.


