சர்வதேச கிரிக்கெட்டில் சில பேட்ஸ்மேன் - பவுலர் இடையேயான போட்டி காலத்தால் அழியாதது. கிரிக்கெட் களத்தில் அந்த மாதிரியான எதிரிகள் தான் பாண்டிங்கும் ஹர்பஜன் சிங்கும். ஹர்பஜன் சிங்கை பார்த்தாலே மனரீதியாக முதலில் கீழே இறங்கி, பின்னர் உடனடியாக அவுட்டாகிவிடுவார் பாண்டிங்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த 3வது வீரர் பாண்டிங். ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான பாண்டிங்,  இந்தியாவில் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்தியாவில் அவரது பேட்டிங் சராசரி வெறும் 26.48 ஆகும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஒட்டுமொத்த சராசரி 51.85. அவரது கெரியர் முழுக்கவே இந்தியாவில் சரியாக ஆடியதில்லை.  அதற்கு காரணம் ஹர்பஜன் சிங். இந்தியாவில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் சிங்கின் பவுலிங்கில், பெரும்பாலும் களத்திற்கு வந்ததுமே அவுட்டாகிவிடுவார் பாண்டிங்.

2001ம் ஆண்டு தொடங்கியது பாண்டிங்கின் இந்த சொதப்பல் பயணம். 2001ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அந்த தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. அந்த தொடரின் தொடர் நாயகன் இளம் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். அந்த தொடரில் தான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த தொடர் தான் ஹர்பஜன் சிங்கின் கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் அணியில் நிரந்தர இடம்பிடித்தார். அந்த தொடரில் ரிக்கி பாண்டிங் பேட்டிங் ஆடிய 5 இன்னிங்ஸ்களிலுமே அவரை ஹர்பஜன் சிங் தான் வீழ்த்தினார். அத்தொடரில் 3 இன்னிங்ஸில் பாண்டிங் டக் அவுட். மற்ற இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 17 ரன்கள் மட்டுமே அடித்தார். ரிக்கி பாண்டிங்கின் கெரியரில் அவருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவரும் நிலையில், இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினின் யூடியூப் சேனலில் “டி.ஆர்.எஸ் வித் ஆஷ்” என்ற ஷோவில் அஷ்வினுடன் பேசிய பாண்டிங், தனது கெரியரில் தன்னை பாடாய்படுத்திய ஹர்பஜன் சிங் குறித்து பேசினார். அப்போது, ஹர்பஜன் சிங்குடன் நம்பமுடியாத அளவிற்கு சில மோதல்கள் உள்ளன. எனக்கு மிகச்சிறப்பாக பந்துவீசியிருக்கிறார் ஹர்பஜன். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னை அதிகமான முறை அவுட்டாக்கியிருக்கிறார்.

நான் களத்திற்கு சென்றதும், ஹர்பஜனின் பந்தில் முன்வந்து ஒரு பந்தை தள்ளுவேன்; ஆனால் அது பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜ் ஆகி ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆகும். நான் களத்தைவிட்டு நான் வெளியேறும்போது எந்த இடத்தில் தவறு நடந்தது என்று யோசித்துக்கொண்டே செல்வேன். அந்த முமெண்ட்டிலிருந்து எனது பேட்டிங் டெக்னிக் மீது எனக்கே நம்பிக்கை போய்விட்டது. வேறு வித்தியாசமான வகையில் ஆட முயற்சி செய்தேன். அடுத்த இன்னிங்ஸில் இறங்கிச்சென்று ஸ்டம்பிங் ஆகிவிட்டேன். அடுத்த இன்னிங்ஸில் ஸ்வீப் ஆட முயன்று பேட்டின் கீழ் பகுதியில் எட்ஜ் ஆகி அவுட்டானேன் என்று பாண்டிங் தெரிவித்தார்.