கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் 3 ஃபீல்டர்களை ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.

கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு நிகராக ஃபீல்டிங்கும் முக்கியம். பல நேரங்களில் பவுலர்களால் ஒரு பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்த முடியாத சூழல்களில் ஒரு சிறந்த ஃபீல்டர் அசாத்தியமான ரன் அவுட்டையோ, அபாரமான கேட்ச்சையோ பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திவிடுவார்கள். 

முக்கியமான வீரரை ரன் அவுட் செய்தோ அபாரமான கேட்ச்சை பிடித்தோ, அந்த ஃபீல்டர் ஆட்டத்தில் ஏற்படுத்தும் திருப்புமுனை, அவர் 40-50 ரன்கள் அடித்ததற்கு சமம். எனவே ஒரு அணி ஃபீல்டிங்கிலும் சிறந்து விளங்கினால்தான் சர்வதேச அரங்கில் கோலோச்ச முடியும். 

அந்த வகையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறந்து விளங்கி, ஒரு பத்தாண்டு காலம் கோலோச்சிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங்கிடம் ரசிகர் ஒருவர், ஆல்டைம் பெஸ்ட் 3 ஃபீல்டர்களை தேர்வு செய்யும்படி கேட்டார். 

அதற்கு பாண்டிங், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், டிவில்லியர்ஸ், ஜாண்டி ரோட்ஸ் ஆகிய மூவரையும் குறிப்பிட்டுள்ளார். பாண்டிங் கூறிய மூவரும் சரியானவர்கள் தான். ஆனால் அவர் வரிசைப்படுத்திய விதம், பாரபட்சமானது. ஏனெனில் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஃபீல்டிங் என்று சொன்னதுமே உடனே, நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். அந்தளவிற்கு தலைசிறந்த ஃபீல்டர் அவர். ஃபீல்டிங்கின் அடையாளமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அப்படியிருக்கையில், தனது கேப்டன்சியின் கீழ் ஆடிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமண்ட்ஸின் பெயரை முதல் பெயராக குறிப்பிட்டுள்ளார் பாண்டிங்.