உலக கோப்பையை வென்ற உத்வேகத்திலும் உற்சாகத்திலும் இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகையால் வலுப்பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட முக்கியமான தொடராக கருதுவது ஆஷஸ் தொடரைத்தான். இரு அணிகளுக்குமே ஆஷஸ் தொடர் என்பது ஈகோ பிரச்னை. இரு அணிகளுக்குமே இது முக்கியமான தொடர் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. 

இந்நிலையில், ஆஷஸ் தொடர் குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், பென் ஸ்டோக்ஸை தாறுமாறாக புகழ்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், பென் ஸ்டோக்ஸிடம் முன்பெல்லாம் ஒரு அவசரம் இருக்கும். ஆனால் தற்போது அவரது ஆட்டம் நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறது. அவர் வலிமையான வீரராக திகழ்வதோடு அவரிடம் ஈகோ அதிகமிருப்பதாக தெரிகிறது. இளம் வீரருக்கு இவையெல்லாம் தேவையான குணங்கள். அவற்றையெல்லாம் ஸ்டோக்ஸ் பெற்றிருக்கிறார். 

உலக கோப்பையில் சூழலை கருத்தில்கொண்டு முதிர்ச்சியுடன் ஆடினார். அவரது முதிர்ச்சியான ஆட்டம்தான் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கப்போகிறது. ஸ்டோக்ஸ், ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் போன்று ஒரு சிறந்த வீரராக இருக்கிறார். இங்கிலாந்து அணியின் இதயத்துடிப்பாக ஸ்டோக்ஸ் இருக்கிறார். ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டுமெனில் ஸ்டோக்ஸை பிரகாசிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.