ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் காட்டுத்தீ பரவி பேரிழப்பை ஏற்படுத்தியது. சுமார் 60 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இந்த காட்டுத்தீக்கு இரையாகியது. 10 லட்சத்துக்கும் அதிகமான விலங்குகள் பலியாகின. இந்த காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் வகையில், முன்னாள் ஜாம்பவான்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. 

புஷ்ஃபயர் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் தலைமையிலான இரண்டு அணிகள் மோதுகின்றன. வரும் 9ம் தேதி மெல்போர்னில் இந்த போட்டி நடக்கிறது. 

இந்த போட்டியில் பிரயன் லாரா, குர்ட்னி வால்ஷ், பிரட் லீ, மேத்யூ ஹைடன், சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன், வாசிம் அக்ரம், யுவராஜ் சிங் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர். 

90கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் ஆடிய ஜாம்பவான் வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டு ஆடுகின்றனர். 90’ஸ் கிட்ஸ்களின் நாயகர்களாக திகழ்ந்த வீரர்கள் இந்த போட்டியில் ஆடுகின்றனர். 

இந்நிலையில், ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களான பாண்டிங்கும் பிரயன் லாராவும் வலைப்பயிற்சி செய்யும் வீடியோவை பாண்டிங் டுவிட்டரில் பகிர, அந்த வீடியோ வைரலாகிவருகிறது.