இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி, 2-1 என தொடரை இழந்து நாடு திரும்பிய ஆஸ்திரேலியா, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

இந்த தொடர்களுக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. மன அமைதிக்காகவும் தெளிவுக்காகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் தானாகவே முன்வந்து ஓய்வெடுத்துக்கொண்ட, ஆஸ்திரேலியாவில் அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். பிக்பேஷ் லீக்கிலேயே அவர் ஆடிய நிலையில், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார். 

ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளிலுமே மேக்ஸ்வெல் இடம்பெற்றுள்ளார். பிக்பேஷ் லீக்கில் அபாரமாக ஆடியும் கூட, மார்கஸ் ஸ்டோய்னிஸிற்கு இரண்டில் ஒரு அணியில் கூட இடம் கிடைக்கவில்லை. இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

Also Read - ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றி.. இந்திய அணியின் மோசமான தோல்வி.. சுவாரஸ்ய சம்பவங்கள்

மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவருமே ஒரே மாதிரியான வீரர்கள், அதாவது ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்கள். எனவே இவர்கள் இருவரில் ஒருவர் என்ற நிலையில், ஸ்டோய்னிஸ் புறக்கணிக்கப்பட்டு, மிட்செல் மார்ஷ் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஸ்டோய்னிஸ் பிக்பேஷ் லீக்கில் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் மேத்யூ வேட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளிலும் எடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், ஸ்டோய்னிஸ் புறக்கணிப்பு குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஸ்டோய்னிஸ் துரதிர்ஷ்டக்காரர். அவர் அருமையான ஃபார்மில் இருந்தும்கூட அணியில் இடம் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் இதற்கெல்லாம் அவர் தளர்ந்துவிடக்கூடாது. இந்த நேரத்தில் அவர் செய்ய வேண்டிய ஒரே விஷயம், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். சிறப்பான ஆட்டத்தின் மூலம், தேர்வாளர்கள் முன் தனது பெயரை முன்வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஸ்டோய்னிஸ் - மார்ஷ் இருவரில் ஒருவருக்குத்தான் அணியில் இடமிருந்திருக்கும். அதனால் மிட்செல் மார்ஷை எடுத்திருப்பார்கள் என்று பாண்டிங் தெரிவித்தார். 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா, மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட்.

ஆஸ்திரேலிய டி20 அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட், அஷ்டன் அகர், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, சீன் அப்பாட், மிட்செல் மார்ஷ்.