சர்வதேச அளவிலும் இந்திய அணியிலும் டாப் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்தான். விராட் கோலியின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் உள்ளன. அதேநேரத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பல தருணங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாத நிலையில், அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி ஆசிய கோப்பையை வென்றுகொடுத்தார். அதற்கு முன்னதாக நிதாஹஸ் டிராபி டி20 தொடரையும் ரோஹித் சர்மா வென்று கொடுத்தார். இவ்வாறு கேப்டனாக செயல்பட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் ரோஹித் சர்மா. 

ஆசிய கோப்பையை வென்றபிறகு அதிரடியான ஒரு பேட்டியையும் கொடுத்தார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தன்னை நியமித்தால், கேப்டனாக செயல்பட தயார் என்று அதிரடியாக பேட்டி கொடுத்தார். அப்போதே ரோஹித்தின் கேப்டன்சி ஆசையும் கோலிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதும் தெரியவந்தது. 

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் மீண்டும் ரோஹித் - கோலி மோதல் குறித்த விவாதம் எழுந்தது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித்தின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும், ரோஹித் - கோலியின் தலைமையில் இரண்டு கேங்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், ஏற்கனவே விராட் கோலியை இன்ஸ்டாக்ராமில் அன்ஃபாலோ செய்திருந்த ரோஹித் சர்மா, அண்மையில் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை அன்ஃபாலோ செய்தார். ரோஹித்தின் இந்த செயல், ஏற்கனவே ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையேயான மோதல் குறித்து பேசியவர்களுக்கு நல்ல இறையாக அமைந்தது. கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் வகையில் ரோஹித் சர்மாவின் செயல் அமைந்திருந்தது. 

ஆனால் ரோஹித் - கோலி இடையே பனிப்போர் இல்லை என்பதை உறுதிப்படுத்த முயன்று அணி நிர்வாகத்தினரும் பிசிசிஐயின் நிர்வாகக்குழுவும் தோற்று கொண்டிருக்கிறது. பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றார். பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ரோஹித் - கோலி இடையே மோதல் என்று ஊடகங்கள் தான் சொல்கிறது என்று சமாளித்திருந்தார். 

வினோத் ராய் ஊடகத்திடம் தெரிவித்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவிக்குமாறு இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவரிடம் நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவர் கூறினார். ஆனால் அந்த வீரர் அதற்கு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறுமாறு நிர்வாகக்குழு உறுப்பினர் கூறியது ரோஹித்திடமா? அல்லது கோலியிடமா? என்பது தெரியவில்லை. அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.