உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி, முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 

இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதேபோலவே டாப் ஆர்டரும் பவுலர்களும் முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் கடைசி வரை நின்றாலோ அல்லது சதமடித்தாலோ இந்திய அணியின் வெற்றி நிச்சயமாகிவிடும். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து, கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்து அசத்தினார். இவ்வாறு இந்திய அணிக்கு எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐசிசி தொடர்கள் என்றாலே அடித்து நொறுக்குபவர் தவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் தவானுக்கு கை கட்டைவிரலில் அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தவான், அபாரமாக ஆடி சதமடித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யவில்லை. தவானின் கையை பரிசோதித்ததில் கட்டை விரலில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

எனவே அவர் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார். நாளை நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் 16ம் தேதி நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் தவான் கண்டிப்பாக ஆடமாட்டார். அதன்பின்னர் நடக்கும் ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் ஆடமாட்டார் என்றே தெரிகிறது. இந்த மாதத்தில் நடக்கும் போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஜூலை 2ம் தேதி நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி, அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தவான் ஆடாததால் தொடக்க வீரராக ரோஹித்துடன் ராகுல் களமிறக்கப்படுவார். தவானுக்கு பதிலாக யார் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. உலக கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு ஆகிய இருவரின் பெயர்களும் அடிபட்டன. 

தவான் எப்போது முழு உடற்தகுதி பெறுவார் என்பதை ஒரே நைட்டில் சொல்லிவிடமுடியாது. அதனால் ஒரு வார காலம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிஷப் பண்ட்டை அழைத்துள்ளதாகவும் ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்வதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்றாலும் 15 பேர் கொண்ட அணியில் இருக்கமாட்டார். தவானின் உடற்தகுதியை பொறுத்து 10 நாட்களுக்கு பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. தவான் காயத்தை அடுத்து அவரது இடத்தில் ராயுடுவா ரிஷப் பண்ட்டா? என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்வதாக பிடிஐ தெரிவித்துள்ளது. 

கவாஸ்கர், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.