தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டதற்கான காரணத்தை பார்ப்போம். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீளாததால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஷிகர் தவானுக்கும் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் ஒருநாள் அணியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர். 

இந்திய ஒருநாள் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்க தொடருக்கு அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ரோஹித் சர்மா வந்துவிடுவார் என்பதால் ரோஹித் சர்மா கேப்டன்சி செய்வார். துணை கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுவார். 

இதற்கிடையே தென்னாப்பிரிக்கா தொடரில் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்வதால், பும்ரா தற்காலிக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், பும்ராவை துணை கேப்டனாக நியமித்ததற்கான காரணம் வெளிவந்துள்ளது. ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை தொடர்களுக்கு வந்துவிடுவார். எனவே மீண்டும் ராகுல் துணை கேப்டனாகிவிடுவார். இந்த தொடரில் ரோஹித் ஆடாததால் ராகுல் கேப்டன்சி செய்கிறார். 3 விதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் பும்ராவின் பங்களிப்பு மற்றும் அவரது கிரிக்கெட் மூளை ஆகிய இரண்டுக்குமான பரிசாக பும்ராவை துணை கேப்டனாக நியமிக்க தேர்வாளர்கள் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இருந்தபோதும், அவர்களைவிட பும்ராவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.