மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. இந்த சீசனில் ஆடிய முதல் 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் ஆர்சிபியை எதிர்கொள்கிறது. ஆனால் ஃபாஃப் டுப்ளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றுவருகிறது. 

புனேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார். ஆர்சிபி அணியில் க்ளென் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் ஆடுவதால் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு நீக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), டேவிட் வில்லி, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு வீரர்கள் டேனியல் சாம்ஸ் மற்றும் டைமல் மில்ஸ் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு ஜெய்தேவ் உனாத்கத் மற்றும் ராமன்தீப் சிங் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு அணி அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களுடன் ஆடலாம் என்றாலும் கூட, மும்பை அணி பொல்லார்டு மற்றும் டிவால்ட் பிரெவிஸ் ஆகிய 2 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டும் களமிறங்கியுள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களே போதும் என்று மும்பை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, ராமன்தீப் சிங், முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா, பாசில் தம்பி.