மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளை போல கோர் டீம் சரியாக அமையாததுதான் ஆர்சிபி அணியால் ஐபிஎல்லில் சோபிக்க முடியாமல் தொடர்ந்து சொதப்புவதற்கு காரணம். ஆனால் கோர் டீமை கட்டமைக்க அந்த அணி நிர்வாகம் முயல்வதே இல்லை. அணி நிர்வாகம் என்று சொல்வதற்கே முடியாது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும், வீரர்களுடன் சேர்த்து பயிற்சியாளர்களும் மாற்றப்பட்டு கொண்டே இருக்கின்றனர். அதுதான் அந்த அணியால் ஜொலிக்க முடியாமல் போவதற்கு முக்கியமான காரணம். 

ஒவ்வொரு சீசனிலும் எந்தவித நோக்கமுமே இல்லாமல், அந்தந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்படும் வீரர்களை எடுப்பதும், பின்னர் கழட்டிவிடுவதும் ஆர்சிபி அணியின் வழக்கம். கடந்த சீசனில் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் ஹெட்மயரை பஞ்சாப் அணியுடன் கடும் போட்டி போட்டு எடுத்தது. ஆனால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்காமலேயே கழட்டிவிட்டது. தற்போது செம ஃபார்மில் இருக்கும் அவரை இந்த முறை டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்தது. 

அடுத்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் மிகத்தீவிரமாக எதிர்நோக்கியிருக்கும் ஆர்சிபி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கடந்த 19ம் தேதி கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலத்தில், ஆர்சிபி அணி, தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஆரோன் ஃபின்ச், ஆஸ்திரேலியாவின் ஃபாஸ்ட் பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன், தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன், இலங்கை ஆல்ரவுண்டர் இசுரு உடானா ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்தது. சொந்த மண்ணை சேர்ந்த வீரரான பவன் தேஷ்பாண்டேவையும் ஆர்சிபி அணி எடுத்தது. மேலும் ஜோஷுவா ஃபிலிப் என்ற வீரரையும் ஷேபாஸ் அகமது என்ற வீரரையும் எடுத்தது. மொத்தமாக 8 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. 

இவர்களில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸை ரூ.10 கோடிக்கும் ஃபின்ச்சை ரூ.4.4 கோடிக்கும் ஆர்சிபி அணி எடுத்தது. கேன் ரிச்சர்ட்ஸனை ரூ.4 கோடிக்கும் டேல் ஸ்டெய்னை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கும் எடுத்தது. 

இந்நிலையில், ஏலத்தில் வீரர்கள் தேர்வு மற்றும் அடுத்த சீசன் குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, ஏலத்தில் எங்கள் அணிக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் சிறந்த வீரர்கள். அந்த தேர்வு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சீசனை உண்மையாகவே மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியிருக்கிறேன். வலுவான அணியை கட்டமைப்பது குறித்தும் அணியின் பேலன்ஸ் குறித்தும் மிகத்தீவிரமாக ஆலோசனை செய்திருக்கிறோம். எனவே இது எங்களுக்கு மிகவும் சிறப்பான தொடக்கமாக இருக்கப்போகிறது என்று கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.