ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. 

ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த மூன்று அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி தோல்வியை தழுவுகின்றன. 

விராட் கோலியின் தலைமையில் ஆர்சிபி அணி படுமோசமாக சொதப்பிவருகிறது. ஆர்சிபி அணிக்கு உத்வேகமளித்து புது உற்சாகத்துடன் கடந்த சீசனை அணுகும் விதமாக, தலைமை பயிற்சியாளராக இருந்த வெட்டோரி நீக்கப்பட்டு, கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த சீசனிலும் ஆர்சிபி அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. 

இந்நிலையில், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ்டன் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்சிபி நிர்வாகம். 

கேகேஆர் அணியின் உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட சைமன் கேடிச், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் இயக்குநராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான மைக் ஹெசன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். 

ரவி சாஸ்திரிக்கு கடும் டஃப் கொடுத்தார். ஆனால் மைக் ஹெசன் தேர்வாகவில்லை. இவரது பயிற்சி காலத்தில்தான் நியூசிலாந்து அணி 2015 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்றது. கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்தார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்காக பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். 

ஆர்சிபி அணியின் பிரச்னையே, கோர் டீம் வலுவாக இல்லாததுதான். விராட் கோலி - டிவில்லியர்ஸை தவிர, அந்த அணியில் நிரந்தர வீரர்கள் இல்லை. இவர்களுக்கு அடுத்தபடியாக சாஹல் இருக்கிறார், அவ்வளவுதான். மற்ற வீரர்கள் அனைவருமே மாற்றப்பட்டு கொண்டே இருக்கின்றனர். அதனால் நம்ம டீம் என்ற உணர்வு அந்த அணியின் வீரர்களுக்கு வருவதில்லை. அதுமட்டுமல்லாமல் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படுவதில்லை. ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றால் தூக்கி எறிந்துவிட வேண்டியது. இப்படி இருந்தால் எந்த வீரருக்கு, நம்ம டீமுக்காக ஆடி வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும்..? யாருக்கும் வராது. அதுதான் ஆர்சிபி அணியில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றும்வரை, எத்தனை மாற்றங்களை செய்தாலும் பிரயோஜனமில்லை.