உலக கோப்பை நெருங்கிவிட்டதால் உலக கோப்பைக்கான அணி தேர்வுதான் பிரதான விவாதக்களமாக உள்ளது. உலக கோப்பைக்கான அணியில் 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டார்கள். இந்நிலையில், அந்த வீரர்களில் சிலரே ஃபார்மில் இல்லாமல் இருப்பது வருத்தமான விஷயம்.

ரோஹித், தவான், கோலி என முதல் மூன்று வீரர்கள் அணிக்கு வலு சேர்க்கின்றனர். தவான் அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஃபார்முக்கு திரும்புவதற்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும். டாப் ஆர்டர் வலுவாக இருப்பதே இந்திய அணியின் மிகப்பெரிய பலம். நான்காம் இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய நீண்ட தேடுதல் படலம் நடைபெற்றது.

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பல வீரர்களை களமிறக்கிவிட்டு யாருமே சரியா வராததால் நீண்ட தேடுதல் படலத்திற்கு பேட்டிங்கில் நான்காம் வரிசைக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர் ராயுடு. ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடினார் ராயுடு. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளை இந்திய அணி விரைவில் இழந்துவிட்ட நிலையில், களத்தில் நிலைத்து ஆடி 90 ரன்களை குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நம்பிக்கையளித்தார். 

ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலில் அவர் அடித்த 90 ரன்கள் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. அந்த இன்னிங்ஸ் அவரது சிறப்பான பேட்டிங்குகளில் ஒன்று. அதன்பிறகு அவர் நான்காம் வரிசையை உறுதி செய்துவிட்டதாகவே கருதப்பட்டது. 


ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் சொதப்பிவிட்டார். 2 மற்றும் 3வது போட்டிகளில் விரைவிலேயே களத்திற்கு வந்தார் ராயுடு. அவருக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடி தனது திறமையை நிரூபித்து உலக கோப்பை அணியில் இடத்தை உறுதி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டு அரிய வாய்ப்புகளையும் தவறவிட்டார் ராயுடு. ராயுடு தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. அவரது தன்னம்பிக்கையற்ற மனநிலையும் மோசமான் ஃபார்மும் மீண்டும் நான்காம் இடம் குறித்த கவலையை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய ஒரு கருத்து கடும் விவாதத்துக்கு உள்ளானது. அதாவது தேவைப்பட்டால் விராட் கோலி நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவார் என்று சாஸ்திரி தெரிவித்தார். ராகுலை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு கோலி 4ம் வரிசையில் இறக்கப்படுவார் என்ற கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

எனவே உலக கோப்பைக்கு தனக்கான இடம் உறுதியாகாத நிலையில், சிறப்பாக ஆடி தன்னை ஓரங்கட்ட முடியாதபடி நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டிய ராயுடு, ஆஸ்திரேலிய தொடரில் முதல் 3 போட்டிகளில் படுமோசமாக சொதப்பியதால் நான்காவது போட்டியில் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராயுடுவுக்கு பதில் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சரியாக ஆடாத தவானுக்கு பதில்தான் ராகுல் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராயுடுவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டார் ராகுல்.

தவானை அணியிலிருந்து அவ்வளவு எளிதாக நீக்கிவிடமாட்டார்கள். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் சாஸ்திரி சொன்னபடி சூழலுக்கு ஏற்றாற்போல் ராகுல் மூன்றாம் வரிசையிலும் கோலி நான்காம் வரிசையிலும் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அது வெற்றிகரமாக அமைந்துவிட்டால் ராயுடுவுக்கான இடம் கேள்விக்குறிதான். 

ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் சிறப்பாக ஆடிய ராயுடு, உலக கோப்பை நெருங்கிய நேரத்தில் தனது இடத்துக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார். உலக கோப்பை அணியில் ராயுடு எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.