இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. 

இரண்டாவது போட்டியில் இந்திய அணி எந்த மாற்றங்களும் செய்யவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் தான் களமிறங்கியுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் முதல் பேட்டிங்கில் சராசரி ஸ்கோர் 292. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்று தெரிந்தும், இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

பெரிய இன்னிங்ஸை ஆடும் திறன்மிக்க ரோஹித் சர்மா, ஏற்கனவே நாக்பூரில் நன்றாக ஆடியிருப்பதால், இன்றைய போட்டியில் பெரிதாக சோபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு தவானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். 

கோலி - தவான் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவந்தது. பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற இந்த ஜோடியை மேக்ஸ்வெல் பிரித்தார். 29 பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த தவானை மேக்ஸ்வெல் வீழ்த்தினார். 9வது ஓவரிலேயே தவான் அவுட்டாகிவிட்டதால் ராயுடு களத்திற்கு வந்தார். 

கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நான்காம் இடத்தில் சிறப்பாக ஆடியதால் ராயுடு அந்த இடத்தை உறுதி செய்துவிட்டதாக நினைக்கப்பட்ட நிலையில், இன்னும் அதுகுறித்த விவாதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உலக கோப்பையில் சூழலுக்கு ஏற்றவாறு கோலியை நான்காம் வரிசையில் இறக்கப்படுவார் என்று கூறி பயிற்சியாளர் சாஸ்திரி மீண்டும் விவாதத்தை உண்டாக்கினார். 

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் தொடக்கத்திலேயே விழுந்துவிட அபாரமாகவும் பொறுப்பாகவும் ஆடி 90 ரன்களை குவித்து தான் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என நிரூபித்தார் ராயுடு. அதன்பிறகும் அந்த இடத்துக்கான விவாதங்கள் அவருக்கு இழைக்கப்படும் அநீதி என சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ராயுடு சரியாக ஆடவில்லை. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் 9வது ஓவரிலேயே களத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. கோலியுடன் சேர்ந்து நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட முயன்றார். ஆனாலும் 18 ரன்களில் நாதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பேட்டிங் பிட்ச்சான நாக்பூரில் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்கலாம். ஆனால் அதை அசால்ட்டாக வீணடித்துவிட்டார் ராயுடு.