இந்தியாவில் இதுவரை 20 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 16 லட்சம் பேர் குணமடைந்துவிட்ட நிலையில், 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க, மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, மாஸ்க் அணியாமல் சென்றது மட்டுமல்லாது அதுகுறித்து விசாரித்த காவலரிடம் வாக்குவாதமும் செய்துள்ளார். மாஸ்க் அணியாத மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. 

இந்நிலையில், திங்கட்கிழமை(ஆகஸ்ட் 10) இரவு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவி ரிவாபாவும் காரில் சென்றுள்ளனர். ஜடேஜா மாஸ்க் அணிந்திருக்கிறார். ஆனால் அவரது மனைவி ரிவாபா, மாஸ்க் அணியவில்லை. அதை கவனித்த தலைமை காவலர், சோனல் கோசாய், காரை நிறுத்தி, ஜடேஜாவின் மனைவியிடம் மாஸ்க் அணியாதது குறித்து விசாரித்துள்ளார். இதையடுத்து அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார் ரிவாபா. 

இதுகுறித்து பேசியுள்ள காவல்துறை துணை ஆணையர் மனோகர்சின்ஹ் ஜடேஜா, ரிவாபா மாஸ்க் அணியாததை தலைமை காவலர் விசாரித்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார். இதுகுறித்து ரிவாபா ஜடேஜா மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.