ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடர் நடப்பது உறுதியானதால், அனைத்து வீரர்கள் மற்றும் அணிகளும் அதற்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

அனைத்து அணிகளும் ஆகஸ்ட் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றன. மற்ற அணிகள் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல சிஎஸ்கே அனுமதி கோரியது. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே வீரர்களுக்கு சென்னையிலேயே 6 நாட்கள் பயிற்சி முகாம் நடத்த சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது. வீரர்களின் ஃபிட்னெஸை உறுதி செய்வதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.

சிஎஸ்கே கேப்டன் தோனி உட்பட அணியில் ஆடும் உள்நாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் இந்த முகாமில், அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா கலந்துகொள்ளவில்லை. அவரது சொந்த காரணங்களுக்காக இந்த பயிற்சி முகாமில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என சிஎஸ்கே அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், சென்னைக்கு வரவில்லை. அவர் நியூசிலாந்திலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிடுவார். 

அதேபோல தென்னாப்பிரிக்க வீரர்களான டுப்ளெசிஸ் மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் செப்டம்பர் ஒன்றாம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றனர். சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு ஒரு நாளைக்கு முன் ஜடேஜா, அணி வீரர்களுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.