Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND இது லிஸ்ட்லயே இல்லயே.. இதெல்லாம் தேவையில்லாத ஆணி..!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் யாருமே எதிர்பார்த்திராத விதமாக ரவீந்திர ஜடேஜா 5ம் வரிசையில் களமிறக்கப்பட்டுள்ளார்.
 

ravindra jadeja promoted over ajinkya rahane in batting in fourth test against england
Author
Oval, First Published Sep 2, 2021, 5:57 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முழுவதுமாகவே இந்திய அணியின் தேர்வு விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாகி கொண்டே இருக்கிறது. இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை ஒரு போட்டியில் கூட ஆடவைக்கவில்லை.

முதல் போட்டியில் அவரை அணியில் எடுக்காததிலிருந்தே, அவரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழ தொடங்கிவிட்டன. அணியின் சீனியர் வீரர்களில் ஒருவராகவும், அனுபவம் வாய்ந்த சிறந்த ஸ்பின்னரான அஷ்வினை 2வது மற்றும் 3வது டெஸ்ட்டிலும் கோலி ஆடவைக்கவில்லை.

இன்று லண்டன் ஓவலில் தொடங்கிய 4வது டெஸ்ட்டிலாவது அவரை அணியில் எடுப்பார்கள் என நினைத்தால், இந்த டெஸ்ட்டிலும் அவர் ஆடவில்லை. இஷாந்த் சர்மாவின் பவுலிங் பெரிதாக எடுபடாத நிலையில், 4வது ஃபாஸ்ட் பவுலராக ஆடிய அவர் அணியில் தேவையில்லை என்ற கருத்துகள் வலுவாக இருந்தது. ஆனால், ஜெயித்தாலும் தோற்றாலும், அணியின் மீதான நம்பிக்கையை காட்டும் விதமாக 2வது டெஸ்ட்டில் ஆடிய இஷாந்த் சர்மாவை 3வது டெஸ்ட்டிலும் ஆடவைத்தார். ஆனால் 3வது டெஸ்ட்டில் இஷாந்த் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

4வது டெஸ்ட்டில் இஷாந்த் மற்றும் ஷமி முழு ஃபிட்னெஸுடன் இல்லாததால் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். ஆனால் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. இடது கை பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்திவல்ல, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்துள்ள அஷ்வின், கணிசமான இடது கை பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை கண்டிப்பாக சரித்துவிடுவார். ஆனால் அவர் அணியில் எடுக்கப்படவில்லை.

4வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 39 ரன்களுக்கே, ரோஹித்(11), ராகுல்(17), புஜாரா(4) ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. முதல் செசனிலேயே டாப் 3 வீரர்களும் ஆட்டமிழந்துவிட, 5ம் வரிசையில் யாருமே எதிர்பார்த்திராத வகையில், ரஹானேவிற்கு பதிலாக ஜடேஜா இறக்கப்பட்டார்.

பொதுவாக 7ம் வரிசையில் பேட்டிங் ஆடக்கூடிய ஜடேஜா, இந்த இன்னிங்ஸில் ரஹானே மற்றும் ரிஷப் பண்ட்டுக்கு முன்பாக களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக 5ம் வரிசையில் அணியின் சீனியர் வீரரான அஜிங்க்யா ரஹானே தான் இறங்கி ஆடிவருகிறார். இந்நிலையில், இந்த இன்னிங்ஸில் ஜடேஜா அந்த வரிசையில் இறக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேன்கள் இறக்கப்படுவார்களே தவிர, மற்றபடி பேட்டிங் ஆர்டரில் தேவையில்லாத மாற்றங்கள் செய்யப்படமாட்டாது. ஆனால் ரஹானேவின் பேட்டிங் ஆர்டரில் ஜடேஜா இறக்கப்பட்டுள்ளார். இதெல்லாம் கண்டிப்பாக தேவையில்லாத ஆணி..

அணியின் பேட்டிங் சொதப்பலை மறைக்க இதுபோன்ற தேவையில்லாத முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்படி ரஹானே மீது நம்பிக்கையில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு பல முன்னாள் வீரர்களின் ஆலோசனையை போல, ரஹானேவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவை அணியில் சேர்த்திருக்கலாம். அதைவிடுத்து, அவரை அணியில் வைத்துக்கொண்டே அவரது பேட்டிங் ஆர்டரை கீழ்நோக்கி தள்ளுவது சரியான அணுகுமுறையாக இருக்கமுடியாது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios