Asianet News TamilAsianet News Tamil

#AUSvsIND அவரோட பேட்டிங் டெக்னிக் வேற லெவல்..! அவர் நல்லா ஆடுறது இந்திய அணிக்கு மிகச்சிறந்த சமிக்ஞை - ஜடேஜா

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லின் பேட்டிங் டெக்னிக் மிகச்சிறப்பாக இருப்பதாக ரவீந்திர ஜடேஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

ravindra jadeja opines shubman gill has very good batting technique
Author
Sydney NSW, First Published Jan 8, 2021, 8:51 PM IST

இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் டெஸ்ட் போட்டியில் படுமட்டமாக சொதப்பியதையடுத்து, மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில். அந்த போட்டியில் நன்றாக ஆடி அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்ற கில், சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்தார்.

ஆஸி., மண்ணில் அந்த அணிக்கு எதிராக, சவாலான கண்டிஷனில் மிகச்சிறப்பாக ஆடி தனது 2வது டெஸ்ட் போட்டியிலேயே முதல் அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்தாலும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சரியாக ஐம்பது ரன்களில் ஆட்டமிழந்தாலும், நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்து அவரது பணியை செவ்வனே செய்தார்.

இளம் வீரர் ஷுப்மன் கில்லின் பேட்டிங்கால் கவரப்பட்ட பல முன்னாள் ஜாம்பவான்களும் அவரை வெகுவாக பாராட்டிவருகின்றனர். சிறந்த தடுப்பாட்டம் மற்றும் பாசிட்டிவான அதிரடி பேட்டிங், தெளிவு ஆகியவற்றின் விளைவாக அவருக்கு இந்திய கிரிக்கெட்டில் கண்டிப்பாக மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக விவிஎஸ் லக்‌ஷ்மண் புகழாரம் சூட்டியிருந்த நிலையில், இந்திய வீரர் ஜடேஜாவும் கில்லின் பேட்டிங் டெக்னிக் மிகச்சிறப்பாக உள்ளதாக புகழ்ந்துள்ளார்.

கில் குறித்து பேசிய ஜடேஜா, ஷுப்மன் கில் மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர். மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடக்கூடிய அளவிற்கு பொறுமை கொண்டவர் கில். அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது நல்ல விஷயம். மேலும் ரோஹித்துடன் இணைந்து ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்களுக்கு மேல் அடித்தது இந்திய அணிக்கு நல்ல சமிக்ஞை. 2வது இன்னிங்ஸிலும் அவர் சிறப்பாக ஆடுவார் என நம்புவோம் என்றார் ஜடேஜா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios