டேல் ஸ்டெய்ன் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோரின் டெஸ்ட் சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் பல சாதனைகளை தகர்த்தார். 434 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்த 2ம் இடத்தில் இருந்துவந்த கபில் தேவின் சாதனையை தகர்த்தார் அஷ்வின்.
2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், மொத்தமாக 442 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2வது இன்னிங்ஸில் தனஞ்செயா டி சில்வாவின் விக்கெட் அஷ்வினின் 440வது டெஸ்ட் விக்கெட்.
440 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 439 விக்கெட்டுகளுடன் 8ம் இடத்தில் இருந்த டேல் ஸ்டெய்னை பின்னுக்குத்தள்ளி 8ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் அஷ்வின். 86வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அஷ்வின் 440 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
மேலும் இலங்கைக்கு எதிராக 60 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லையும் எட்டினார். ஷேன் வார்ன் இலங்கைக்கு எதிராக 59 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், அவரது சாதனையை முறியடித்துள்ளார் அஷ்வின்.
இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 66 விக்கெட்டுகளும், வாசிம் அக்ரம் 63 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். அஷ்வின் இந்த பட்டியலில் 60 விக்கெட்டுகளுடன் 4ம் இடத்தில் உள்ளார்.
