Asianet News TamilAsianet News Tamil

அந்நியன் பட அம்பி வசன மீம்ஸின் மூலம் ச(ர்ச்சை)ஞ்சய் மஞ்சரேக்கருக்கு பதிலடி கொடுத்த அஷ்வின்..!

தன்னை ஆல்டைம் சிறந்த வீரர் இல்லை என்று கூறிய சஞ்சய் மஞ்சரேக்கருக்கு ரவிச்சந்திரன் அஷ்வின், அந்நியன் திரைப்பட வசன மீம்ஸை பதிவிட்டு நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார்.
 

ravichandran ashwin retaliation to sanjay manjrekar
Author
Chennai, First Published Jun 9, 2021, 2:37 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200, 300, 400 ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அஷ்வின், மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 409 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 286 விக்கெட்டுகள் இந்தியாவிலும், 123 விக்கெட்டுகள் வெளிநாடுகளிலும் வீழ்த்தப்பட்டவை.

சமகாலத்தின் சிறந்த ஸ்பின்னராக திகழும் அஷ்வினை பலரும் ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக பார்க்கிறார்கள். ஆனால் சஞ்சய் மஞ்சரேக்கர், தான் அஷ்வினை ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், அஷ்வினை ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக மதிப்பிடுவதில் எனக்கு சில பிரச்னைகள் உள்ளன. அடிப்படை பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் விக்கெட்டுகளை வீழ்த்தி குவிக்கும் அஷ்வின், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒருமுறை கூட 5 விக்கெட்டுகளை(ஒரு இன்னிங்ஸில்) வீழ்த்தியதில்லை.

ravichandran ashwin retaliation to sanjay manjrekar

கடந்த 4 ஆண்டுகளில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினுக்கு நிகராக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனை ஜடேஜா பெற்றிருக்கிறார். ஜடேஜாவுக்கு நிகராக விக்கெட்டுகளை வீழ்த்தியும் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட அக்ஸர் படேல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதான் அஷ்வினை ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர் என்று மதிப்பிடுவதில் எனக்கு இருக்கும் பிரச்னை என்று மஞ்சரேக்கர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த டுவிட்டர் பதிவில், ஆல்டைம் சிறந்த வீரர் என்பது மிகப்பெரிய கௌரவம். டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் இன்னும் சில வீரர்கள் என் பார்வையில் ஆல்டைம் சிறந்த வீரர்களாக உள்ளனர். ஆனால் அஷ்வின் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்று சஞ்சய் மஞ்சரேக்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர்போன சஞ்சய் மஞ்சரேக்கரின் இந்த கருத்துக்கு நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார் அஷ்வின். அந்நியன் திரைப்படத்தில், விக்ரமின் அம்பி கேரக்டர், சாரி(விவேக்) கேரக்டரிடம் கூறும் வசனமான, ”அப்படி சொல்லாதடா சாரி.. மனசெல்லாம் வலிக்கிறது” என்ற மீம்ஸை போட்டு மஞ்சரேக்கருக்கு நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார். அஷ்வினின் இந்த பதிலடி டுவிட்டரில் செம வைரலாகிவருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios