இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி., அணி 338 ரான்களையும், இந்திய அணி 244 ரன்களையும் அடித்த நிலையில், 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

407 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோஹித்தும் கில்லும் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. கேப்டன் ரஹானே 4 ரன்களுக்கு நடையை கட்ட, அதன்பின்னர் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 118 பந்தில் 97 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் அடித்து ஆடியபோது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் 97 ரன்களில் அவுட்டான பின்னர், புஜாராவும் 77 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ஹனுமா விஹாரியும் அஷ்வினும், கடைசி நாள் ஆட்டம் முழுவதையும் விக்கெட்டே விழாமல் ஆடி முடித்து, போட்டியை டிரா செய்தனர்.

அஷ்வினும் விஹாரியும் இணைந்து 42 ஓவர்கள் பேட்டிங் ஆடினர். இவர்கள் இருவரும் போட்டியை டிரா செய்ய ஆடுகிறார்கள் என்ற கடுப்பிலும், விக்கெட்டை வீழ்த்த முடியாத விரக்தியிலும் இருந்த ஆஸி., அணியின் கேப்டன் டிம் பெய்ன், கீப்பிங் செய்யும்போது அஷ்வினை சீண்டிக்கொண்டே இருந்தார்.

அஷ்வினை சீண்டியது மட்டுமல்லாது, ஏதாவது பேசிக்கொண்டே இருந்தார். அது ஆஸி., வீரர்களுக்கே வெறுப்பை ஏற்படுத்தியிருக்கும். அந்தளவிற்கு ஏதாவது பேசிக்கொண்டே இருந்தார் டிம் பெய்ன். அஷ்வினை சீண்டிக்கொண்டே இருக்க, நான் எவ்வளவுதான் டீசண்ட்டாக நடந்துகொள்ள முடியும் என்று பெய்னிடம் கேட்டேவிட்டார் அஷ்வின்.

ஆனாலும் தொடர்ந்து, அஷ்வினை விடாத பெய்ன், “உன்னை(அஷ்வினை) பிரிஸ்பேனில் சந்திக்க காத்திருக்கிறேன்” என்றார். அதற்கு பதிலளித்த அஷ்வின், “நானும் உனது இந்திய வருகைக்காக காத்திருக்கிறேன்” என்று பதிலடி கொடுத்தார்.

அதற்கு பதிலாக கெட்ட வார்த்தையுடன், “குறைந்தபட்சம் என்னை எனது அணி வீரர்களுக்காவது பிடிக்கும். ஆனால் உன்னை உன் அணி வீரர்களுக்கே பிடிக்காது அல்லவா?” என்றார் பெய்ன்.

அஷ்வின், “உன்(பெய்ன்) பேச்சை நிறுத்து; நான் ஆடுகிறேன்” என்று சொல்லிவிட்டார். டிம் பெய்ன் தொடர்ந்து பிதற்றிக்கொண்டிருக்க, அஷ்வின் பேட் செய்யாமல் நிற்க, பவுலர் நேதன் லயன் காத்துக்கொண்டிருந்தார்.

“உன் ஆள்தான் காத்துக்கிட்டு இருக்கான்” என்று லயன் காத்துக்கொண்டிருப்பதை டிம் பெய்னிடம் நினைவூட்டினார் அஷ்வின். ஆனாலும் திருந்தாத பெய்ன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

ஸ்லெட்ஜிங் உத்தியும் எடுபடவில்லை; போதாதற்கு மூக்குடைபட்டதுதான் மிச்சம். ஆனால் விடாமல் பிதற்றிக்கொண்டே இருந்தார் டிம் பெய்ன். கடைசி நாள் ஆட்டத்தில் மட்டுமே 3 கேட்ச்களையும் கோட்டைவிட்டார் பெய்ன். கேட்ச் விட்டது, ஜெயிக்க வேண்டிய போட்டியை ஜெயிக்க முடியாமல் போனது ஆகிய விரக்திகளின் எதிரொலியாகத்தான் எதையாவது பேசிக்கொண்டே இருந்தார் பெய்ன்.