உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக திகழ்கிறது. உலகம் முழுதும் வெற்றிகளை குவித்து தரமான மற்றும் வலுவான அணியாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாதவகையில், மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். 

ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு உத்வேகமடைந்துள்ளது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நல்ல கலவையிலான வீரர்களை பெற்றுள்ள நியூசிலாந்து அணி, பவுலிங்கில் அசத்திவருகிறது. இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் நன்றாக உள்ளன. அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி எப்போது எப்படி ஆடும் என்பதை கணிக்கவே முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவித்த வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 105 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்டது.

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், உலக கோப்பை குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசியுள்ள அஷ்வின்,  இந்திய அணியில் பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதி போட்டியில் மோதும். இந்திய அணி கோப்பையை வெல்லும் என்பது எனது கணிப்பு என அஷ்வின் தெரிவித்துள்ளார்.