இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி., அணி 338 ரான்களையும், இந்திய அணி 244 ரன்களையும் அடித்த நிலையில், 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

407 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோஹித்தும் கில்லும் சேர்ந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. கேப்டன் ரஹானே 4 ரன்களுக்கு நடையை கட்ட, அதன்பின்னர் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 118 பந்தில் 97 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் அடித்து ஆடியபோது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. 

ஆனால் அவர் 97 ரன்களில் அவுட்டான பின்னர், புஜாராவும் 77 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த ஹனுமா விஹாரியும் அஷ்வினும், கடைசி நாள் ஆட்டம் முழுவதையும் விக்கெட்டே விழாமல் ஆடி முடித்து, போட்டியை டிரா செய்தனர்.

அஷ்வினும் விஹாரியும் இணைந்து 42 ஓவர்கள் பேட்டிங் ஆடினர். அவர்கள் இணையை பிரிக்கமுடியாமல் விரக்தியடைந்தனர் ஆஸி., வீரர்கள். இந்த பார்ட்னர்ஷிப்பிற்கு இடையே, ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரியிடம் தமிழில் பேசினார் அஷ்வின். “பத்து பத்து பந்துகளாக ஆடினால் போதும்” என்று விஹாரியிடம் அஷ்வின் கூற, அதற்கு விஹாரி சரியென்று தலையசைத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.

பெரும்பாலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் தமிழ் தெரியும். அதனால் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் அவர்களிடம் தமிழிலேயே பேசிய வீடியோக்கள் இதற்கு முன்பும் பலமுறை வைரலாகியிருக்கின்றன.