இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்தியாவில் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என ஆசியாவிற்கு வெளியேயும் அபாரமாக பந்துவீசி முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பவர் அஷ்வின். 

ஆஸி.,க்கு எதிரான நடப்பு தொடரிலும் தனது பணியை செவ்வனே செய்துவருகிறார். ஆஸி.,க்கு எதிரான முதல் 2 டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரான அஷ்வின்,அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார். அந்த எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறார் அஷ்வின்.

சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அஷ்வினுக்கு விக்கெட்டே விழவில்லை. 2வது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டாக வார்னரை வீழ்த்தினார் அஷ்வின். இதன்மூலம் டேவிட் வார்னரை அதிகமுறை(10 முறை) டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை கடந்த போட்டியிலேயே படைத்துவிட்டார். அதிகபட்சமாக 191 இடது கை விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையை கடந்த மெல்போர்ன் டெஸ்ட்டிலேயே தகர்த்துவிட்டார் அஷ்வின். சிட்னி டெஸ்ட்டில் வார்னரை வீழ்த்தியதன் மூலம் 193 இடது கை விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையுடன், இனிமேல் எவராலும் அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800, 700, 500 விக்கெட்டுகள் வீழ்த்திய முரளிதரன், ஷேன் வார்ன், ஆண்டர்சன், க்ளென் மெக்ராத் ஆகிய பவுலர்களைவிட அஷ்வின், பெரியளவில் முன்னணியில் உள்ளார். முரளிதரன் 191 இடது கை விக்கெட்டுகளையும், ஆண்டர்சன்(184), ஷேன் வார்ன் மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் தலா 172 விக்கெட்டுகள் என்ற அளவிலேயே உள்ளனர்.