நடிகர் விவேக்கின் மறைவால் அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் இன்று காலை காலமானார். 59 வயதான நடிகர் விவேக், திரைப்படங்களின் வாயிலாக, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு கருத்துகளையும், சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளையும் தனது காமெடிகளின் மூலம் மக்களுக்கு கொண்டுசென்றவர். மக்களை சிரிப்புடன் சேர்த்து சிந்திக்கவும் செய்தவர். சினிமாவிற்கு அப்பாற்பட்டு, பொதுவாழ்க்கையிலும் சமூக மற்றும் சூழலியல் நலனுக்காக உழைத்தவர் விவேக். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் வாக்கை ஏற்று, ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் முயற்சியில் 37 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
59 வயதான நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடதுபுற ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தையடுத்து, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

விவேக்கின் உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்துத்தான் சொல்லமுடியும் என்று மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார்.
விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய மூத்த நடிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் பலரும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில், விவேக்கின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடும் அஷ்வின், மும்பையில் உள்ளார்.
இந்நிலையில், விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட டுவீட்டில், நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்று தன்னுடைய அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார் அஷ்வின்.
அதேபோல, தமிழகத்தை சேர்ந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான அபினவ் முகுந்த்தும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
