Asianet News TamilAsianet News Tamil

ஆஸி.,க்கு எதிராக 208 ரன்கள் அடித்தும் இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணம்..! ரவி சாஸ்திரி விளாசல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார் ரவி சாஸ்திரி.
 

ravi shastri criticizes team india poor fielding in first t20 against australia
Author
First Published Sep 21, 2022, 10:38 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது.

கேஎல் ராகுலின் அதிரடி அரைசதம் (35 பந்தில் 55 ரன்கள்) மற்றும் ஹர்திக் பாண்டியாவின் காட்டடி அரைசதத்தால் (30 பந்தில் 71 ரன்கள்) 20 ஓவரில் 208 ரன்களை குவித்தது இந்திய அணி.

ஆனாலும் 209 ரன்கள் என்ற கடின இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் தோற்றது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி, கேமரூன் க்ரீனின் அதிரடி அரைசதம் (30 பந்தில் 61 ரன்கள்) மற்றும் மேத்யூ வேடின் அதிரடியான ஃபினிஷிங்கால்(21 பந்தில் 45 ரன்கள்) கடைசி ஓவரின் 2வது பந்தில் இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - கேமரூன் க்ரீன், மேத்யூ வேட் காட்டடி.. முதல் டி20யில் கடின இலக்கை அடித்து இந்தியாவை வீழ்த்தி ஆஸி., அபார வெற்றி

208 ரன்களை குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது, இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்குமே அதிருப்திதான். இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் இணைந்து 8 ஓவரில் 101 ரன்களை வாரி வழங்கினர். டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல், இருவரும் இணைந்து 8 ஓவரில் 101 ரன்களை வழங்கியது இந்திய அணிக்கு பின்னடைவாகவும் கவலையளிக்கும் விஷயமாகவும் அமைந்தது.

மேலும் இந்திய அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. மொத்தமாக 3 கேட்ச்களை தவறவிட்டனர். ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து தட்டிப்பறித்த கேமரூன் க்ரீன் 42 ரன்களுடன் களத்தில் இருந்தபோது ஹர்திக் பாண்டியா வீசிய 8வது ஓவரின் 3வது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டீப் மிட் விக்கெட் திசையில் நின்ற அக்ஸர் படேல் தவறவிட்டார். அதன்பின்னர் 19 ரன்களை க்ரீன் கூடுதலாக விளாசியுடன், ஸ்மித்துடனான அவரது பார்ட்னர்ஷிப்பும் நீண்டது.

அதற்கடுத்த ஓவரிலேயே அக்ஸர் படேலின் பவுலிங்கில் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த கேட்ச்சை கேஎல் ராகுல் லாங் ஆஃப் திசையில் தவறவிட்டார். இப்படியாக இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் படுமோசமாக சொதப்ப, 208 ரன்கள் அடித்தும் கூட கடைசியில் தோற்க நேரிட்டது.

இந்நிலையில், இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங்கால் அதிருப்தியடைந்த முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியை விமர்சித்துள்ளார். தான் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணியை பற்றி ஆஹா ஓஹோவென புகழ்ந்துதள்ளிய சாஸ்திரி, இப்போது கழுவி ஊற்றியுள்ளார்.

இதையும்  படிங்க - ரோஹித், கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் அவர்..! இனிமேல் அதைப்பற்றி பேசாதீங்க.. கம்பீர் நறுக்

இந்திய அணியின் ஆட்டம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி,  கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக இருந்தது. ஆனால் இப்போது இளமை மிஸ் ஆகிறது. கடந்த 5-6 ஆண்டுகளில் இந்திய அணியின் ஃபீல்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. ஃபீல்டிங்கில் மற்ற அணிகள் நெருங்கமுடியாத உச்சத்தில் இந்தியா இருந்தது. ஆனால் இப்போது ஃபீல்டிங்கில் அந்த வல்லைமையும் சிறப்பும் இல்லை. ஜடேஜா இல்லை. ஃபீல்டிங்கில் எக்ஸ் ஃபேக்டர் எங்கே என கேள்வியெழுப்பியுள்ள சாஸ்திரி, மோசமான ஃபீல்டிங் தான் தோல்விக்கு காரணம் என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios