தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ரஷீத் கான் ஆடுகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் அனைத்து வகையிலும் முழு அர்ப்பணிப்புடன் தனது சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடியவர் ரஷீத் கான். 

மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார் ரஷீத் கான். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவரில் 155 ரன்கள் அடித்தது. ரஷீத் கான் 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் அடித்தார். 156 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியை 137 ரன்களில் சுருட்டி 18 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. பவுலிங்கிலும் அசத்திய ரஷீத் கான், 4 ஓவர் வீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

இந்த போட்டியில், வழக்கமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய பேட்டிலிருந்து சற்று வித்தியாசமான வடிவமைப்பிலான பேட்டை பயன்படுத்தினார் ரஷீத் கான். ரஷீத் கான் அந்த பேட்டுடன் களத்திற்கு வந்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற வீரர்களும் வியப்பாக பார்த்தனர். அந்த பேட்டை வைத்து நன்றாகத்தான் ஆடினார் ரஷீத் கான்.

அந்த பேட்டின் பின்பக்கம், ஒட்டகத்தின் முதுகு போன்று இருந்ததால் “The Camel” என்று அந்த பேட்டிற்கு பெயர்சூட்டி டுவீட் செய்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.