உலக கோப்பை தோல்வியை அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பாதின் நைப் அதிரடியாக நீக்கப்பட்டு ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான அணிகளுக்குமே ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமாக ரஷீத் கான் திகழ்கிறார். ரிஸ்ட் ஸ்பின்னில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தி நல்ல ஆல்ரவுண்டராக வலம்வருகிறார். 

இந்நிலையில், ரஷீத் கான் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், சமகால கிரிக்கெட்டின் சிறந்த 3 பவுலர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ரஷீத் கான், முதல் பெயராக தென்னாப்பிரிக்காவின் ஃபாஸ்ட் பவுலர் ரபாடாவை குறிப்பிட்டார். அதன்பின்னர் இரண்டாவதாக தனது சக வீரரான முஜீபுர் ரஹ்மானின் பெயரை குறிப்பிட்ட ரஷீத் கான், அடுத்ததாக பும்ராவின் பெயரை சொன்னார். 

மூன்று பெயர்களை சொன்னபிறகும், இன்னொரு பவுலரையும் சொல்லியாக வேண்டும் என்று சொல்லி புவனேஷ்வர் குமார் பெயரை சொன்னார். புவனேஷ்வர் குமாருடன் ரஷீத் கான் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது. ரஷீத் கான் சிறந்த பவுலர்கள் என்று தேர்வு செய்த நால்வரில் இருவர் இந்திய வீரர்கள்.