ஐபிஎல், பிபிஎல் உட்பட உலகம் முழுதும் நடத்தப்படும் பெரும்பாலான டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார் ரஷீத் கான். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார். அதேபோல பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியிலும் முக்கியமான வீரராக திகழ்கிறார். 

சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக ஜனவரி 8ம் தேதி நடந்த போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி தோற்றது. ஆனால் இந்த போட்டியில் 136 ரன்கள் என்ற இலக்கை சிட்னி சிக்ஸர்ஸ் அணியை எளிதாக அடிக்கவிடாமல் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி போராடவிட்டது. அதற்கு முக்கிய காரணம் ரஷீத் கானின் அபாரமான பவுலிங். ரஷீத் கான் அந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஹாட்ரிக்கும் அடங்கும்.

இது டி20 கிரிக்கெட்டில் ரஷீத் கான் வீழ்த்திய 3வது ஹாட்ரிக் ஆகும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் ரஷீத் கானும் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் இணைந்த ஐந்தாவது வீரர் ரஷீத் கான் ஆவார். இவருக்கு முன்பாக, இந்தியாவின் அமித் மிஷ்ரா, ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டை, வெஸ்ட் இண்டீஸின் ஆண்ட்ரே ரசல், பாகிஸ்தானின் முகமது சமி ஆகியோருக்கு அடுத்து இந்த பட்டியலில் ரஷீத் கானும் இணைந்துள்ளார். 

அமித் மிஷ்ரா 3 ஹாட்ரிக்குகளையுமே ஐபிஎல்லில் தான் வீழ்த்தினார். 2008 ஐபிஎல் சீசனில் டெல்லி அணியில் ஆடிய அமித் மிஷ்ரா, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக முதல் ஹாட்ரிக்கை வீழ்த்தினார். அதன்பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடியபோதும், அதே டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக மறுபடியும் ஹாட்ரிக் வீழ்த்திய அமித் மிஷ்ரா, சன்ரைசர்ஸ் அணியில் ஆடியபோது, 2013ல்  புனே அணிக்கு எதிராக மூன்றாவது ஹாட்ரிக்கை வீழ்த்தினார்.