உலக கோப்பை தோல்வி எதிரொலியாக ஆஃப்கானிஸ்தானின் மூன்றுவிதமான கிரிக்கெட் அணிக்கும் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பை தொடரில் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இறங்கியது ஆஃபானிஸ்தான் அணி. ஆனால் அந்த அணி ஒரு வெற்றியைக்கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து தொடரை விட்டு வெளியேறியது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது. ஆனால் அந்த அணி அனுபவம் குறைந்த அணி என்பதால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் தோற்றது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்திருக்கலாம். ஆனால் கேப்டன் குல்பாதின் நைபால் தான் அந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோற்றது. 

உலக கோப்பைக்கு முன்னதாக திடீரென ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் நியமிக்கப்பட்டு குல்பாதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கே ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கிடைத்த கேப்டன் பொறுப்பை குல்பாதின் நைப் சரியாக பயன்படுத்தவில்லை. உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பினார் குல்பாதின் நைப். 

இந்நிலையில், உலக கோப்பை தோல்வி எதிரொலியாக குல்பாதின் நைப் அதிரடியாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ரஹ்மத் ஷாவும் அதிரடியாக நீக்கப்பட்டார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று அணிகளுக்குமே இளம் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். உலகளவில் அனைத்து டி20 லீக் போட்டிகளிலும் ஆடி, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடையாளமாக திகழும் ரஷீத் கான், கேப்டனாக நியமிக்கப்பட்டார்.