Asia Cup: தனுஷ்கா குணதிலகாவை வம்பு இழுத்து அவுட்டாக்கிய ரஷீத் கான்.! களத்தில் சூடான வாக்குவாதம்.. வைரல் வீடியோ
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் ரஷீத் கான் - தனுஷ்கா குணதிலகா இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 175 ரன்களை குவித்தது. அபாரமாக பேட்டிங் ஆடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 45 பந்தில் 84 ரன்களை குவித்தார்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகிய ரவீந்திர ஜடேஜா..! இந்திய அணிக்கு மரண அடி
176 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ்(19 பந்தில் 36 ரன்கள்) மற்றும் பதும் நிசாங்கா (28 பந்தில் 35 ரன்கள்) ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
அதன்பின்னர் தனுஷ்கா குணதிலகா (20 பந்தில் 33 ரன்கள்) மற்றும் பானுகா ராஜபக்சா (14 பந்தில் 31 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் 19.1 ஓவரில் இலக்கை அடித்து இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீக் சுற்றில் ஆஃப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து பழிதீர்த்தது இலங்கை அணி.
இந்த போட்டியில் குணதிலகாவும் ராஜபக்சாவும் சிறப்பாக பேட்டிங் ஆடி இலங்கையை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்று கொண்டிருந்ததால், ஆஃப்கானிஸ்தான் அணி கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கி கொண்டிருந்தது. அதனால் ஆஃப்கானிஸ்தானுக்கு அந்தநேரத்தில் விக்கெட் தேவைப்பட்டது. அந்த அணி விரக்தியில் இருந்தது. அப்படியான சூழலில் தான் ரஷீத் கான் வேண்டுமென்றே குணதிலகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையும் படிங்க - நீ நாட் அவுட்டா போவதால் டீமுக்கு என்ன யூஸ்.? அரைசதம் அடித்தும் வாசிம் அக்ரமிடம் திட்டு வாங்கிய முகமது ரிஸ்வான்
17வது ஓவரை ரஷீத் கான் வீச, அந்த ஓவரின் முதல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி அடித்தார் குணதிலகா. உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ரஷீத் கானை அசால்ட்டாக ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்தார் குணதிலகா. ஏற்கனவே விக்கெட் தேடலில் இருந்த ரஷீத் கான், குணதிலகாவின் பவுண்டரியால் கடுப்பாகி அவரை ஏதோ திட்ட, குணதிலகாவும் வரிந்துகட்டி கொண்டு ரஷீத் கானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ரஷீத் கானும் குணதிலகாவும் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பானுகா ராஜபக்சா இருவரையும் விலக்கிவிட்டார். இந்த வாக்குவாத சம்பவத்தையடுத்து, அதே ஓவரின் 4வது பந்தில் குணதிலகாவை ரஷீத் கான் வீழ்த்தினார். (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ரஷீத் கான்..?) அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.