அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி தண்டர் அணி, உஸ்மான் கவாஜா மற்றும் கேப்டன் காலம் ஃபெர்குசன் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவரில் 168 ரன்களை குவித்தது. உஸ்மான் கவாஜா 50 பந்தில் 63 ரன்களையும் ஃபெர்குசன் 46 பந்தில் 73 ரன்களையும் குவித்தனர். 

169 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் வெதரால்டு அதிரடியாக ஆடி 37 பந்தில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. அடிலெய்டு அணி சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 

8ம் வரிசையில் களமிறங்கிய ரஷீத் கான், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். வழக்கமான பேட்டிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான வடிவமைப்பிலான பேட்டை, கடந்த போட்டியில் பயன்படுத்திய ரஷீத் கான், இந்த போட்டியில் அந்த பேட்டை வைத்து காட்டடி அடித்தார். 

கடைசி 2 ஓவரில் அடிலெய்டு அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்படியான சூழலில் 19வது ஓவரை எதிர்கொண்ட ரஷீத் கான், டேனியல் சாம்ஸ் வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரியும் ஐந்தாவது பந்தில் சிக்ஸரும் கடைசி பந்தில் பவுண்டரியும் அடித்தார். ரஷீத் கானின் அதிரடியால் அந்த ஓவரில் அடிலெய்டு அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. 

இதையடுத்து கடைசி ஓவரில் அடிலெய்டு அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் சிடில் சிங்கிள் தட்டினார். இரண்டாவது பந்தில் ரன் அடிக்காத ரஷீத் கான், அடுத்த இரண்டு பந்திலும் பவுண்டரி அடித்தார். இதையடுத்து கடைசி 2 பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் இரண்டாவது ரன் ஒடும்போது ரஷீத் கான் ரன் அவுட்டானார். 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்து ரஷீத் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்டதால், 3 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு அணி சிட்னி தண்டர் அணியிடம் தோற்றது.