Asianet News TamilAsianet News Tamil

#AUSvsIND ஆஸி.,க்கு பறக்கிறாரா ராகுல் டிராவிட்..? தெளிவுபடுத்திய ராஜீவ் சுக்லா

ஆஸி.,யில் திணறும் இந்திய பேட்ஸ்மேன்களை வழிநடத்த ராகுல் டிராவிட் ஆஸ்திரேலியா செல்கிறாரா என்ற கேள்விக்கு பிசிசிஐ துணைத்தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா பதிலளித்துள்ளார்.
 

rajeev shukla clarifies that rahul dravid will not fly to australia to help team india
Author
Mumbai, First Published Dec 21, 2020, 10:28 PM IST

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் படுமோசமான பேட்டிங்கால், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்து படுமட்டமாக தோற்றது.

விராட் கோலி அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்பும் நிலையில், ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமியும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். கோலி, ஷமி ஆகிய இருவருமே ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பு.

முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி என யாருமே சரியாக ஆடவில்லை. 2வது இன்னிங்ஸில் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தைக்கூட எட்டவில்லை. ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகிய இருவரின் அபாரமான பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர்.

இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேகமான ஸ்விங் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கி இந்திய வீரர்களை பேட்டிங்கில் மேம்படுத்த ராகுல் டிராவிட்டால் தான் முடியும் என்பதால் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்திருந்தார்.

rajeev shukla clarifies that rahul dravid will not fly to australia to help team india

இந்த கருத்து வெங்சர்க்காரின் கருத்து மட்டுமல்ல; ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய கடினமான கண்டிஷன்களில் நன்றாக பேட்டிங் ஆடி இந்திய அணியை கரைசேர்த்த அனுபவம் கொண்டவர் ராகுல் டிராவிட். எனவே அவரது ஆலோசனை இந்திய வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற வகையில், ராகுல் டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன.

இந்நிலையில், பிசிசிஐயின் துணை தலைவராக பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ராகுல் டிராவிட் ஆஸ்திரேலியா செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜீவ் சுக்லா, முதல் டெஸ்ட்டின் ஒரு இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடினர். ஒரு இன்னிங்ஸில் தான் சொதப்பினர். இது அனைவருக்கும் நடக்கக்கூடியதுதான். பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகிய இருவரும் இந்திய வீரர்களின் பேட்டிங்கை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து அணி நிர்வாகத்துடன் ஆலோசித்துவருகின்றனர். இந்திய அணி அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடும்; இந்திய வீரர்கள் அவர்களாகவே வெகுண்டெழக்கூடிய திறன் பெற்றவர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. எனவே யாரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டியதில்லை என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios