ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு பெரிய வீரரும் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.
அதற்காக, முதல் அணியாக அமீரகம் சென்றடைந்த சிஎஸ்கே, அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. மற்ற அணிகளும் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளன.
வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஆடாததால், ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் அந்த அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். அப்படி கடுமையாக பாதிக்கப்படும் அணிகளில் முதன்மையானது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய 3 இங்கிலாந்து வீரர்களையே அதிகமாக சார்ந்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவரும் ஏற்கனவே ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகிய நிலையில், தற்போது ஜோஸ் பட்லரும் விலகியுள்ளார்.
ஜோஸ் பட்லருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
ஏற்கனவே ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகிய 2 நட்சத்திர வீரர்கள் விலகிய நிலையில், தற்போது பட்லரும் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும்.
