ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜோஃப்ரா ஆர்ச்சரை எடுத்த நிலையில், மும்பையை எடுக்கவிடாமல் வேறு அணிகளை ஆர்ச்சரை எடுக்குமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா கண்ணை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடந்தது. சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், முதல் ஐபிஎல் கோப்பையை எதிர்நோக்கும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் நல்ல வீரர்களை எடுத்து வலுவான அணிகளை கட்டமைத்துள்ளன.
ஏற்கனவே 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ஜோஃப்ரா ஆர்ச்சர், டைமர் மில்ஸ், டிம் டேவிட், இஷான் கிஷன், டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன் ஆகிய வீரர்களை எடுத்துள்ளது. ஏற்கனவே ரோஹித், சூர்யகுமார், பொல்லார்டு, பும்ரா ஆகிய வீரர்களை தக்கவைத்த நிலையில், ஏலத்திலும் தரமான வீரர்களை எடுத்துள்ளது.
சமகாலத்தின் பெஸ்ட் பவுலர்களில் ஒருவரான பும்ராவை ஏற்கனவே அணியில் பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, சமகாலத்தின் மற்றொரு மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சரையும் ஏலத்தில் எடுத்தது. ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கு மும்பை அணி எடுத்தது. இந்த சீசனில் பெரும்பாலும் ஆர்ச்சர் ஆடவில்லை என்றாலும், அடுத்தடுத்த சீசன்களில் முழுமையாக ஆடுவார். பும்ராவும் ஆர்ச்சரும் இணைந்து ஒரே அணியில், அதுவும் பவுலர்களை நன்றாக பயன்படுத்தும் சிறந்த கேப்டனான ரோஹித்தின் கேப்டன்சியில் ஆடப்போவதை கண்டு அனைத்து அணிகளும் பயந்துபோய் இருக்கின்றன.
ஜோஸ் பட்லர் கூட, பும்ராவும் ஆர்ச்சரும் இணைந்து ஆடப்போவதை, ரொனால்டோவும் மெஸ்ஸியும் இணைந்து ஆடுவதை போன்றது என்று டுவீட் செய்திருந்தார். அந்தளவிற்கு இப்போதிலிருந்தே மற்ற அணிகள் பயப்பட தொடங்கிவிட்டன.
ஆர்ச்சரை ஏலம் விட்டபோது, ஆர்ச்சர் ஏற்கனவே ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை எடுக்க மும்பையுடன் போட்டி போட்டது. ஆனால் ஆர்ச்சரை எடுப்பதில் உறுதியாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி விட்டுக்கொடுக்கவே இல்லை. ரூ.6 கோடியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலகிக்கொள்ள, அதன்பின்னர் சன்ரைசர்ஸ் அணி மும்பையுடன் போட்டி போட்டது. ஆனால் மும்பை அணி எக்காரணத்தை முன்னிட்டும் ஆர்ச்சரை விட்டுக்கொடுப்பதாயில்லை. அதனால் கடைசி வரை உறுதியாக இருந்து ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கு எடுத்தது.
ஏற்கனவே பும்ரா இருக்கும் மும்பை அணி ஆர்ச்சரையும் எடுப்பது பெரும் அபாயம் என்பதால், ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் சங்கக்கரா, மற்ற அணிகளிடம் ஆர்ச்சரை ஏலம் கேட்குமாறு கண்ணை காட்டினார். அந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகிவருகிறது.
ஆர்ச்சருக்காக போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 2 அணிகளின் பயிற்சியாளர்களான சங்கக்கரா மற்றும் முரளிதரன் ஆகிய இருவரும் இலங்கை முன்னாள் வீரர்கள். ஆர்ச்சரை எடுத்த மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனேவும் இலங்கைக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
